ஸ்ரீ நாராயண குரு
இருப்பிடம் : இந்தியாவின் கேரளாவிலுள்ள முக்கியமான ஆன்மீக மடங்களில் சிவகிரி மடம் ஒன்றாகும். புகழ் பெற்ற சமய-தத்துவ ஞானியான ஸ்ரீ நாரயாணகுரு அவர்களின் சமாதி இந்த திருமடத்தில் இடம்பெற்றுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் வற்கலை 2.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
வாழ்க்கை வரலாறு : நாராயண குரு திருவனந்தபுரத்தில் செம்பசந்தி கிராமத்தில் ஆகஸ்ட் 28, 1855 ம் ஆண்டு பிறந்தார். தந்தை மாடன் ஆசான், தாய் குட்டியம்மா. மிகச் சிறு வயதிலேயே வறுமையில் வாடினாலும் கல்வி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரே ஜாதி, ஒரே மதம், ஒரே கடவுள் எனும் உன்னதமான தத்துவத்தை போதித்து அதனை பரப்புவதில் தன் வாழ்நாளை செலவிட்டவரே மஹாஞானி ஸ்ரீ நாராயணகுரு ஆவார்.
தன் இருபத்து மூன்றாவது வயதில் துறவறம் பூண்ட குரு பிறகு முப்பது வயது வரை குமரிமாவட்டத்தில் மருத்துவாழ் மலையில் அவர் சிலகாலம் வாழ்ந்தது தெரியவந்துள்ளது. அவரை ஒரு வாலிப யோகியாக பார்த்த சிலரது பதிவுகள் பிற்காலத்தில் கிடைத்துள்ளன.
1888-ல் திருவனந்தபுரம் அருகேயுள்ள அருவிக்கரை என்ற சிற்றூருக்கு திரும்பி வந்த நாராயணகுரு அங்கே ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து சிவலிங்கமாக பிரதிஷ்டை செய்தார். கோயில் வாசலில் ‘சாதி மத பேதம் இல்லாமல் மக்கள் அனைவரும் வாழும் உதாரண தலமிது ‘ என்று எழுதி வைத்தார்.
கேரள கலாசார வாழ்வை மாற்றியமைத்த பேரியக்கமான எஸ்.என்.டி.பி [ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன சபா] 1903 ல் திருவனந்தபுரத்தை மையமாக்கி அருவிப்புறத்தில் நிறுவப்பட்டது. 1928-ல் குரு தனக்கு பின்பு தன் பணிகளை செய்யும் அமைப்பாக ஒரு சன்யாசி மடத்தை உருவாக்கினார். தர்ம சங்கம் என்ற அவ்வமைப்பு வற்கலை என்ற ஊரில் சிவகிரி என்ற மலைமீது துவங்கப்பட்டது.
நாராயண குருவின் அணுகுமுறை மிக மிக நேரிடையானது. எதிர்மறை மனநிலைக்கு அதில் சற்றும் இடமில்லை. அவர், தன் வாழ்நாள் முழுக்க எதைப்பற்றியும் எதிர்மறையாக எதுவுமே சொன்னதில்லை. அவர் பொதுவாக உபதேசம் செய்வதில்லை. பேருரைகள் ஆற்றும் வழக்கமே இல்லை. தனிப்பட்ட முறையில் பேசும்போது நகைச்சுவை மிக்க சில வரிகள் மட்டுமே சொல்வார்.
சிறுதெய்வ வழிபாட்டை முழுக்க ஒழித்துக்கட்டி அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படி ஆலயங்களை அமைத்து அங்கே சிவன் விஷ்ணு தேவி போன்ற பெருந்தெய்வங்களை நிறுவினார். தெற்குக் கேரளத்தில் கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுகரை, வடக்கே தலைச்சேரி கண்ணனூர், கோழிக்கோடு, ஆலுவா கர்நாடகாவில் மங்களூர் தமிழ் நாட்டில் நாகர்கோவில், ஈழத்தில் கொழும்பு முதலிய ஊர்களில் அவர் நிறுவிய முக்கியமான கோவில்கள் உள்ளன.
நாராயணகுரு தன் 74 வது வயதில் செப்டம்பர் 20,1928-ல் கேரளத்தில் வற்கலை என்ற ஊரில் அவர் உருவாக்கிய சிவகிரி மடத்தில் காலமானார். அங்கே அவரது சமாதி உள்ளது. அவர் இறக்கும்போது அவர் தொடங்கிய சமூக சீர்திருத்த இயக்கம் ஏறத்தாழ அதன் சாதனைகளை முடித்துக் கொண்டு அரசியல் இயக்கமாக ஆகி பேரங்களில் இறங்க ஆரம்பித்திருந்தது. நாராயணகுரு கடைசிக்காலத்தில் எஸ்.என்.டி.பி இயக்கத்தை முழுக்கவே நிராகரிக்கும் மனநிலையில் இருந்தார். அமைப்புசார்ந்த செயல்பாடுகளின் எதிர்விளைவுகளை அவர் காண நேர்ந்தது. கடைசி பதினைந்து வருடங்களில் நாராயணகுரு தத்துவ முக்கியத்துவம் கொண்ட தன் நூல்களை இயற்றினார்.
நாராயணகுரு மலையாளம், சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளில் ஏறத்தாழ ஐம்பது நூல்களை எழுதியுள்ளார். இவற்றில் தர்சன மாலா, ஆத்மோபதேச சதகம் ஆகிய நூல்கள் தத்துவார்த்தமாக முக்கியமானவை. தமிழ்ப் பாடல்கள் பெரிதும் திருமந்திரம் சித்தர் பாடல்கள் ஆகியவற்றின் சாயல் கொண்டவை. குருவுக்கு வெண்பா மிகவும் கைவருகிறது. திருக்குறளை குரு மொழிபெயர்த்திருக்கிறார்.
சிவகிரி மடம்: சிவகிரி ஒரு யாத்திரை மையமாகும். 1904 இல் கட்டப்பட்ட அருகே சிவகிரி மலை மேல் அமைந்துள்ளது. வற்கலை இன் திருவனந்தபுரம் . இது ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் , அவரது சீடர்கள் மற்றும் புனிதர்களின் அமைப்பு,
சாரதா மடம் என்பது ஸ்ரீ நாராயணகுரு அவர்களால் சரஸ்வதியின் கோவிலை நிர்மாணித்த இடமாகும். இது வற்கலை என்ற ஒரு ஊரின் அருகில் உள்ளது.
ஆயிரக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் இந்த திருமடத்தில் டிசம்பர் 30ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரை சிவகிரி யாத்திரை எனும் திருவிழா அனுஷ்டிக்கப்படுகிறது. அச்சமயம் வெவ்வேறு சடங்குகளும் சமூகக்கலை நிகழ்ச்சிகளும் இம்மடத்தில் ஏற்பாடு செய்யப்படுகின்றன.
குரு ஜயந்தி மற்றும் சமாதி நினைவுநாள் போன்றவையும் முறையே ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த விசேஷ நாட்களில் கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், சமபந்தி விருந்துகள், மாநாடுகள் மற்றும் விசேஷ சடங்குகள் போன்றவை சிவகிரிமடத்தின் சார்பில் நடத்தப்படுகின்றன.
திறக்கும் நேரம் : காலை 5.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரை திறந்து இருக்கும்.
அருகில் உள்ள ரயில் நிலையம் : வற்கலை
அருகில் உள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம் 57 கி.மீ
தங்கும் வசதி: உண்டு
பேருந்து வசதி: உண்டு