திருநந்திக்கரை
	


		
 
	
 
5:52:26 AM         Thursday, August 06, 2020

திருநந்திக்கரை

திருநந்திக்கரை
திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை திருநந்திக்கரை
Product Code: திருநந்திக்கரை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                    திருநந்திக்கரை நந்தீகேஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலிருந்து சுமார் 30 கி.மீ தொலைவில் சென்றால் குலசேகரம் என்ற ஊர் உள்ளது. அங்கிருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் திருநந்திக்கரை அமைந்துள்ளது. திற்பரப்பிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது எழில்மிகு மேற்குத் தொடர்ச்சி மலைச்சாரலில் அமைந்துள்ளது. இது ஒரு குகைக்கோயிலாகும்.

மூலவர் : திருநந்திக்கரை மகாதேவர்

சிவாலய ஓட்டம் : மகா சிவராத்திரி தினத்தன்று கன்யாகுமரி மாவட்டத்தில், பன்னிரண்டு சிவாலயங்களை தரிசித்து வழிபடும் ‘சிவாலய ஓட்டம்’ என்ற நிகழ்ச்சி நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. அரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்துவதே இந்த சிவாலய ஓட்டம் என்று சொல்லப்படுகிறது. 

தல வரலாறு : இடுப்புக்கு மேலே மனித வடிவமும், கீழே புலி வடிவமும் கொண்டது புருஷாமிருகம். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரே சிவபெருமானை வேண்டி இப்படியோர் உருவம் ஏற்றார் என்றும் சொல்வார்கள். புருஷாமிருகத்துக்கு விஷ்ணுவைப் பிடிக்காது. தனது எல்லைக்குள் யாராவது திருமால் நாமத்தைக் கூறினால் அவரைத் தாக்கிவிடும். தவ வலிமையைவிட புஜ பலமே சிறந்தது என்று நம்பியவன் பீமன். பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் சிவனும் அரியும் ஒன்று என்பதை உணர்த்த வேண்டும் என்பது ஸ்ரீகிருஷ்ணரது விருப்பம். தர்மர் ஒரு முறை ராஜசூய யாகம் நடத்தத் திட்டமிட்டார். எனவே, யாகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் கொண்டு வருமாறு பீமனைப் பணித்தார். அவனும் சம்மதித்தான். ஆனால், வைணவத்தை வெறுக்கும் அந்த புருஷாமிருகத்திடம் சென்று பால் பெற்று வருவது எப்படி எனத் தயங்கினான்.

இதுவே தக்க தருணம் என நினைத்த ஸ்ரீகிருஷ்ணர், ‘‘பயப்படாதே பீமா. நான் உனக்குப் பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகள் தருகிறேன். புருஷாமிருகம் உன்னைத் தாக்க வரும்போது ருத்திராட்சக் கொட்டைகளில் ஒன்றைக் கீழே போடு. அது சிவலிங்கமாக மாறும். லிங்கத்தைப் பார்த்தவுடன் புருஷாமிருகம் பூஜிக்க ஆரம்பித்து விடும். அப்போது நீ எளிதில் தப்பித்து விடலாம்’’ என்று கூறினார்.
ஸ்ரீகிருஷ்ணர் அளித்த பன்னிரண்டு ருத்திராட்சக் கொட்டைகளுடன் காட்டுக்குச் சென்றான் பீமன். திருமலையில் ஒரு பாறைமீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தது புருஷாமிருகம். பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று உரத்துக் கூறினான். இதனால் புருஷா மிருகத்தின் தவம் கலைந்தது. அது கோபத்துடன் பீமனைத் துரத்தியது. உடனே, பீமன் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அடுத்த கணமே அது சிவலிங்கமாக மாறியது. சிவலிங்கத்தைக் கண்டதும் புருஷாமிருகம் சிவபூஜையை ஆரம்பித்தது. பீமன், ‘‘கோவிந்தா, கோபாலா’’ என்று குரல் எழுப்பினான். புருஷா மிருகம் பீமனைத் துரத்த ஆரம்பித்தது. பீமன் மீண்டும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போட்டான். அங்கும் அது ஒரு சிவலிங்கமாக மாறியது. இந்த இடமே திக்குறிச்சி.
இப்படி பதினோரு இடங்களைத் தாண்டி பன்னிரண்டாவது இடத்தில் திருநட்டாலம் ருத்திராட்சத்தைப் போடும்போது புருஷாமிருகம் பீமனைப் பிடித்துவிட்டது. அப்போது பீமனின் ஒரு கால் புருஷாமிருகத்தின் எல்லைக்குள்ளும், மற்றொரு கால் வெளியேயும் இருந்தன. உடனே பீமன், ‘‘உனது எல்லையைக் கடந்து விட்டேன். என்னை விட்டுவிடு!’’ என்றான் புருஷாமிருகத்திடம்.
அப்போது அங்கு வந்த தர்மரிடம் இருவரும் நியாயம் கேட்டனர். அவர் பாரபட்சம் கருதாமல், ‘‘ஒரு கால் பகுதி புருஷாமிருகத்தின் எல்லையில் இருப்பதால் பாதி உடல் புருஷாமிருகத்துக்கே’’ என்று தீர்ப்பு வழங்கினார். இதைக் கண்டு மகிழ்ந்தது புருஷாமிருகம். அந்த நேரத்தில் ஒளிப் பிழம்புடன் அங்கு தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர், பீமனுக்கும் புருஷாமிருகத்துக்கும் ‘அரியும் சிவனும் ஒன்றே’ என்கிற தத்துவத்தை உணர்த்தினார். இருவரும் ஸ்ரீகிருஷ்ணரை வணங்கினர். தர்மரின் ராஜசூய யாகம் நடக்க உதவியது புருஷாமிருகம்.
புருஷாமிருகத்திடம் இருந்து தப்பிக்க பீமன் ருத்திராட்சங்களைக் கீழே போட அவை அனைத்துமே சிவலிங்கங்களாக மாறி, ஆலயங்கள் எழும்பின என்பார்கள்.
சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந் தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக்கேட்டான். சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.

இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ் வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். 

மகா சிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள், மாசி மாதம் ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பர். சிவராத்திரிக்கு முன் தினம் காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல், காவி உடை அணிந்து புறப்படுவார்கள். ‘கோவிந்தா கோபாலா’ என்று கோஷமிட்டவாறு திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் துவங்குவர். அந்த தொடர் ஓட்டத்தில் பன்னிரு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். பன்னிரண்டாவது ஆலயமான திருநட்டாலத்தில் சந்தனமும் மற்ற ஆலயங்களில் திருநீறும் பிரசாதமாக வழங்கப்படும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர். சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.

பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோயில், திற்பரப்பில் உள்ள குகைக் கோயில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
இது சைவ வைனவ ஒற்றுமக்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா. இந்த விழாவின்போது பக்த்தர்கள் மொத்தம் 12 சிவன் கோவில்களை வரிசையாக ஓடி சென்று தரிசிப்பது வழக்கம். முன்சிறை திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து இந்த ஓட்டம் துவங்குகிறது. வழியெல்லாம் கோவிந்தா கோபாலா என்று கோஷமிட்டபடி ஓடிவரும் பக்தர்களுக்கு பொதுமக்கள் வழி நெடுகிலும்,மோர்,குடிநீர் அன்னதானம் என வழங்கியபடி இருப்பர். முன்சிறையில் துவங்கும் ஓட்டம் அங்கிருந்து திக்குறிசி மகாதேவர் ஆலயம், திற்பரப்பு மகாதேவர் ஆலயம், திருநந்திக்கரை சிவன் கோவில், பொன்மனை திம்பிலார்குடி மகாதேவர் கோவில், திருபன்றிப்பாகம் சிவன் கோவில், கல்குளம் நீலகண்ட மகாதேவர், மேலங்கோடு சிவன் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் ஆலயம், திருவிதாங்கோடு மகாதேவர் கோயில், கோழிப்போர்விளை பள்ளியாடி திருப்பன்றிக்கோடு மகாதேவர் ஆலயம் ஆகிய சிவாலயங்களில் வழிபாடு செய்து 12 வதாக நட்டாலம் சங்கர நயினார் கோவிலுக்கு வந்து தங்கள் சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்வார்கள்.

திருநந்திக்கரை: இங்கு, பார்வதி சமேதராக ஈசன் திருவருள் புரிகிறார். இங்கு உள்ள பரந்து விரிந்த பாறையின் வெப்பம் தாங்காத சிவபெருமான், கோயில் தெப்பக் குளத்தில் சுயம்புவாக எழுந்தருளி, தனக்குக் குளத்திலேயே ஆலயம் எழுப்புமாறு கட்டளையிட்டார் என்கிறது தல புராணம். இது கேரள மாநிலத் தந்திரிகளால் ஆகம விதிப் படியும், கேரள தச்சு சாஸ்திரப்படியும் உண்டான ஆலயம். கோயிலையொட்டி குகைக் கோயில் ஒன்றும், கல்வெட்டுகளும் உள்ளன. அடுத்து, பக்தர்கள் பொன்மனை நோக்கி சிவனாரைத் தரிசிக்க ஓடுகின்றனர். மார்கழி திருவாதிரை,மகா சிவராத்திரி, சோமவாரத்திலும், பிரதோஷ நாளிலும் விசேஷ பூஜைகள் உண்டு.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி உள்ளது. காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். 27 நட்சத்திர மண்டலம் கொண்ட கண துவாரங்கள் இங்கு உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோயிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப்பெறலாம்.
பொதுவாக பிரகார வலம் வரும்போது மூன்று முறை சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோயிலில் உள்ள மண்டபத்தை ஒரு தடவை சுற்றினால் ஒரு ஆண்டு சுற்றியதற்கான பலன் கிடைக்கிறது.  பரசுராமர் தன் தாயைக் கொல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது தாயைக்கொன்ற பாவம் தீர பரசுராமர் நந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து இங்குதான் அவரது பாவம் நீங்கியது.

தல வரலாறு: ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த சிவன் கோயிலுக்கு வந்து காளையை அடக்கும்பிடி சிவனிடம் வேண்டினர்.
சிவபெருமான் அந்த காளையை இழுத்துவந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. 

திருத்தல அமைப்பு : இத்தலம் 12 சிவாலயங்களில் நான்காவது சிவாலயம் ஆகும். சிவலிங்கம் போல உருண்டு திரண்ட ஒரு பாறையைக் குடைந்து கோவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவில் இரண்டு அறைகளைக் கொண்டது. முதலில் சமசதுரமான ஒரு பெரிய அறை உள்ளது. உள் அறை சிறியது. இதில் ஒரு விக்கிரகமும் உள்ளது. உள்ளே செல்ல வாயில் அமைந்துள்ளது. மழைநீர் வாயிலுக்கு நேரே பாயாமலிக்க பாறையின் மேல் ஓடை அழகுபட அமைக்கப்பட்டுள்ளது. இப்பாறையில் ஒரு கல்வெட்டு காணப்படுகிறது மலையடிவாரத்தில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இது ஒரு பழமையான கோவில் என கூறப்படுகிறது. இது கேரள கட்டடக்கலைக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. விமானம் கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

திருத்தல வரலாறு : இராஜராஜசோழன் கடற்கரை ஊராகிய முட்டத்தைக் கைப்பற்றி அதற்குத் தன் பெயராகிய மும்முடிசோழ நல்லூர் என்று பெயரிட்டதோடு திருநந்திக்கரையில் கோயில் கொண்டுள்ள மகாதேவர்க்கு தன் பிறந்த நாளான ஐப்பசி மாதம் சதைய நட்சத்திரத்தன்று விழா கொண்டாடவும் ஏற்பாடு செய்தான் என்று திருநந்திக்கரை சாசனம் கூறுகிறது. இங்கு ஒரு ஆறு ஓடுகிறது. இதற்கு நந்தியாறு என்று பெயர். நதியாற்றின் கரையிலமைந்த ஊராகையால் திருநந்திக்கரை என்ற பெயர் ஏற்பட்டதாக தெரிகிறது.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் : குழித்துறை

பேருந்து வசதி  : உண்டு 

உணவு வசதி : இல்லை

தங்கும் வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×