திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் (குரு)
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் உள்ள தமிழ்நாடு என்றும் மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரான தூத்துக்குடியிலிருந்து 35 கி.மீ தொலைவில் உள்ளது. திருநெல்வேலிக்கு கிழக்கில் 56 கி.மீ தொலைவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது.
சுவாமி : செந்திலாண்டவர், சுப்பிரமணியசுவாமி
அம்பாள் : வள்ளி, தெய்வானை
தலவிருட்சம் : சரவணபொய்கை
சிறப்புக்கள் : குரு தலமாக விளங்கும் இந்த தலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்க்கொண்டார். இந்நாளே கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வு திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. எனவே, கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
தல வரலாறு : இங்குதான் முருகன் சூரபத்மனோடு போரிட்டு வென்று, வெற்றிக் கொடியான சேவல் கொடியுடனும், பார்வதி தேவி அளித்த வேலுடனும் மயில் வாகனத்தில் அருள் பாலிக்கிறார். முருகப் பெருமானோடு போரிட்ட படை வீரர்கள் அய்யனார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள்.
அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார். சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.
போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14 அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.
சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோயில் 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், செயந்திநாதர் என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே செந்தில்நாதர் என மருவியது. தலமும் திருஜெயந்திபுரம் என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.
கோயில் அமைப்பு : 157 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டியபின்பே, முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கிறது. இவர்களை மார்கழி மாதத்தில் தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன. வெளியிலிருந்தபடி முருகரை தரிசனம் செய்யும்போதே பஞ்சலிங்க தரிசனம் செய்ய இயலாது. மூலவர் முருகரின் இடதுபுறம் உள்ள சிறு வாயில் வழியே உள்ளே நுழைந்து சுற்றி வலது புறம் வந்து பாதாள பஞ்சலிங்க தரிசனம் செய்ய வாரநாட்களில் இயலும். திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.
திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் 2 வாளி தண்ணீர் நம் மேலே ஊற்றுவார்கள். பின் நேரடியாகக் கோவிலுக்கு செல்லாமல் அருகிலுள்ள மௌன சுவாமி, காசி சுவாமி, ஆறுமுக சுவாமிகள் மூவர் சமாதிக்கு சென்று வணங்கி விட்டுத்தான் முருகரை காண செல்ல வேண்டும். இவர்கள் சிதிலமடைந்திருந்த திருச்செந்தூர் திருக்கோயிலை புனரமைத்தவர்கள். மேலும், வாக்கு சொல்பவர்கள், ஜோதிடம் பார்ப்பவர்கள், பரிகாரம் செய்பவர்கள் இவர்களுக்கு ஏற்படும் தோஷங்களுக்கு மூவர் சமாதுக்கு கண்டிப்பாக செல்ல வேண்டும். சென்று விளக்கேற்றுவது நன்மை. மூலவர்கள் இரண்டு உண்டு. 2-வது வள்ளி தேவ சேனா சமேத சண்முக முருகரை காணலாம். தரிசனம் முடித்து பிரகாரம் வந்து வலமிருந்து இடமாகச் சென்று மேதா குரு தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்ய வேண்டும். சூரசம்ஹார போரில் இங்கிருந்து முருகருக்கு ஆலோசனை வழங்கியதால் இது குருவின் இருப்பிடம் ஆகும். ஆலங்குடி போன்று குருப்பெயர்ச்சிக்கு இங்கும் பெரிய விஷேசமாய் இருக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் இங்கு ஆமை வாகனத்தில் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி அருள்புரிகின்றார். செல்வம், ஆன்ம பலம் செழிக்க இவரை வணங்குதல் வேண்டும். பின் அருகில் வள்ளி சன்னதி தரிசனம் முடித்து வலமாக சுற்றி வந்து தெய்வானை சன்னதியை தரிசனம் செய்து விட்டு சண்டிகேஸ்வரர் தரிசனம் முடித்து சனீஸ்வரர் சன்னதி பைரவர் அருகருகே உள்ளது. தரிசனம் செய்து விட்டு வெளிப்பிரகாரம் வந்து மீண்டும் வலமிருந்து இடமாகப் பிரகாரம் சுற்றினால் ராஜகோபுரம் நோக்கி விநாயகர் வீற்றிருப்பார் அவரை தரிசித்து கடந்து சென்றால் சூரசம்ஹார மூர்த்தி சன்னதியில் அவரை தரிசித்து அருகில் சகஸ்ர லிங்கமாய் அருள்பாலிக்கும் சிவபெருமானை தரிசித்து விட்டு வந்த வழியே திரும்பி பிரகாரம் வர வேண்டும். அங்கே பெருமாள் நாராயணன் சன்னதி உண்டு. பெருமாளை தரிசித்து விட்டு வெளியே வருகிற வழியில் கொடிமரம் அருகே கோவில் சுவரில் ஒரு துளை இருக்கும். அந்த ஓட்டையில் உங்கள் காதுகளை வைத்தால் வெளிப்புறத்திலிருந்து வரும் கடல் காற்று ஓம் என்று ஒலிக்கும். கவனித்தால் நீண்டதாய் ஓம் எனும் ப்ரணவ மந்திரம் ஒலிப்பதைக் கேட்டு அருள் பெறலாம். பின் கொடிமரம் வணங்கி முருகருக்கு நன்றி சொல்லி அருகில் கல்யாண விநாயகரை வணங்கி தரிசனத்தை முடிக்கலாம்.
பங்குனி உத்திரம், திருகார்த்திகை, வைகாசி விசாகம், கந்த சஷ்டி முருகத்தலங்களில் கந்தசஷ்டிவிழா ஆறு நாட்களே நடக்கும். சில தலங்களில் சஷ்டிக்கு மறுநாள் முருகன் திருக்கல்யாணத்துடன் சேர்த்து ஏழு நாட்கள் நடத்துவர். ஆனால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி முதல் ஆறுநாட்கள் சஷ்டி விரதம், சூரசம்ஹாரம், ஏழாம் நாளில் முருகன், தெய்வானை திருக்கல்யாணம், அடுத்த 5 நாட்கள், சுவாமி திருக்கல்யாண கோலத்தில் ஊஞ்சல் சேவை என இவ்விழா 12 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
திருக்கோவில் காலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : மதுரை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு