திருபாம்புரம் - பாம்புரேஸ்வரர் திருக்கோயில்
திருத்தலஅமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு திருவாரூர்மாவட்டத்தில் மயிலாடுதுறைலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ராகுவும் கேதுவும் ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக போற்றப்படுகிறது.
மூலவர் : சேஷபுரீஸ்வரர் எனப்படும் பாம்புரேஸ்வரர்
உற்சவர்
அம்மன்/தாயார்: பிரம்மராம்பிகை எனப்படும் வண்டார்குழலியம்மன்
தல விருட்சம் : வன்னி மரம்
தீர்த்தம் : ஆதிசேஷன் தீர்த்தம்
தல பெருமை : ராகுவுக்கான பரிகாரத் தலமான திருநாகேஸ்வரமும், கேதுவுக்கான தலமான கீழப்பெரும்பள்ளமும் காவிரிப் பாசனக் கரையில் அமைந்திருக்கிறதென்றால், ராகு கேது இரண்டுக்கும் சேர்த்து விளங்கும் ஒரே பரிகாரத் தலமான திருப்பாம்புரமும் இங்கேதான் உள்ளது. இது பாம்புகள் வழிபட்ட தலம் என்பது சிறப்பு.
இரண்டு நாகங்கள் பின்னிப் பிணைந்திருப்பது போல் தோன்றும் சிற்பம். அனந்தன், பத்மன், வாசுகி, மகாபத்மன், தட்சகன், கார்க்கோடகன், குளிகன், சங்கன் ஆகிய 8 நாகங்களின் கூட்டணிதான் இந்த ஸர்ப்பக் கோலம். இது கல்யாண சர்ப்பம் என்று கூறப்படுகிறது.
சிறப்புகள் : ஆதிசேஷன் வழிபட்ட கோவில் ஆதலால் இன்றும் கோவிலின் உள்ளே பாம்புகள் நடமாட்டம் உள்ளதாக கூறுகிறார்கள். ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகளில் திருப்பாம்பரம் கோவிலுக்குள் மல்லிகையின் மணமோ, தாழம்பூவின் மணமோ வீசுவதாகவும் அச்சமயம் பாம்பு கோவிலுக்குள் எங்கேனும் உலாவிக் கொண்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இத்தலத்தில் பாம்புகள் யாரையும் கடிப்பது இல்லை என்கிறார்கள். விஷம் தீண்டாப் பதி என்ற சிறப்பு இத்தலத்திற்கு உள்ளது.
வரலாறு : சிவபெருமான் இருப்பிடமான கயிலாய மலை. சிவபெருமானை வணங்குவதற்காக வரும் அனைவரும் தம்மைத் தான் வணங்குகின்றனர் என்று பெருமானின் மீதிருந்த சர்ப்பங்களுக்கு கர்வம் ஏற்பட்டது. ஒரு முறை விநாயகப் பெருமான், தம் தந்தையை வணங்கியபோது, சிவனார் கழுத்தில் இருந்த பாம்பு, தன்னையும் விநாயகர் வழிபட்டதாக கர்வம் கொண்டது. இதனால் கோபம் கொண்ட சிவனார் தன் உடல் மீதிருந்த நாகங்களை எல்லாம் உதிர்க்கத் தொடங்கினார். இதனால் நாகங்கள் வலிமை இழந்தன. பொலிவு குன்றிய அவற்றை பூலோகம் செல்லுமாறும், நாக இனம் முழுவதுமே வலிமை இழக்கும்படியும் சபித்தார் பெருமான். அஷ்ட மகா நாகங்களும், ராகு, கேதுவும் தங்கள் சர்ப்ப இனத்தில் ஒருவர் செய்த தவறுக்காக எல்லோரும் சாபம் பெறுதல் தகாது என்று பெருமானை மன்றாடின. பெருமான் அவற்றுக்கு மனமிரங்கி, திருப்பாம்புரத்தில் தன்னை பூஜித்தால் சாப விமோசனம் பெறலாம் என அருளினார். அதன்படி, அஷ்ட மகா சர்ப்பங்கள் உள்பட அனைத்தும் இங்கே பெருமானை வழிபட்டு விமோசனம் அடைந்தன.
ஒரு முறை வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களில் யார் பலசாலி என்பதில் போட்டி ஏற்பட்டது. வாயுபகவான் தன் வலிமையால் மலைகளைப் புரட்டி போட, ஆதிசேஷன் தன் வலிமையால் அதனைத் தடுத்து நிறுத்தியது. இருவரும் சமபலம் கொண்டதால் கோபம் கொண்ட வாயுபகவான் உயிர்களுக்கு வழங்கும் பிராண வாயுவைத் தடுத்தார். இதனால் உயிரினங்கள் சோர்ந்தன. தேவர்களின் வேண்டுகோள்படி ஆதிசேஷன் அந்தப் போரில் இருந்து ஒதுங்கிக் கொள்ள, பின்னர் தம் தவறுக்கு மனம் வருந்தி, திருப்பாம்புரத்தில் லிங்க பூஜை செய்து விமோசனம் அடைந்தது.இதனாலேயே பெருமான் சேஷபுரீஸ்வரர் என்றும் தலம் சேஷபுரி என்றும் வழங்கப்பட்டது. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய நாட்களில் இங்கே சர்ப்பங்களின் நடமாட்டம் இருக்கும் என்கிறார்கள். இவை அந்நேரம் இறைவனை வந்து வழிபடுகின்றனவாம். இந்தக் கோயில் திருநாகேஸ்வரம், நாகூர், கீழப்பெரும்பள்ளம், காளஹஸ்தி, கும்பகோணம் நாகநாதர் கோயில் ஆகிய ஐந்து தலங்களின் பெருமையை ஒருங்கே பெற்ற தலம். இங்கே ஆதிசேஷனுக்கு உத்ஸவர் விக்ரகம் உள்ளது சிறப்பு.
தல அமைப்பு : இவ்வாலயத்தின் இராஜகோபுரம் 3 நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இராஜகோபுரத்தின் எதிரே ஆதிசேஷ தீர்த்தம் இருக்கிறது. மூலவர் பாம்புபுரேஸ்வரர் கிழக்கு நோக்கி நாக கவசம் சாற்றப்பட்டு காட்சி தருகிறார். அம்பாள் சந்நிதியும் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அம்பாள் ஒரு கையில் தாமரை மலரையும் மற்றொரு கையில் ருத்திராக்ஷ மாலையுடனும் அபய முத்திரையுடன் காட்சி தருகிறாள். இக்கோவிலில் உள்ள சட்டநாதர் சந்நிதியும், மலையீஸ்வரர் சந்நிதியும் மிகவும் விசேஷமானது. தலவிநாயகர் ராஜராஜ விநாயகர் சந்நிதி, தேவார மூவர் சந்நிதி, சனீஸ்வரன் சந்நிதி ஆகியவை இங்குள்ள மற்ற சந்நிதிகளாகும். திருவீழிமிழலை என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து அருகில் இருக்கிறது. கிழக்கில் பைரவர் , சூரியர் விஷ்ணு, பிரம்மன், பஞ்சலிங்கங்கள், ஆதிசேடன், இராகுகேது, நாயன்மார் நால்வர்,ஆகியோர் காட்சி தருகின்றனர். பாம்புசேரர் கோயில் கருவறை அர்த்தமண்டபம் மகாமண்டபம் முகமண்டபம் என அமை:ந்துள்ளது. மகாமண்டபத்தில் உற்சவதிருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. சோமஸ்கந்தர் நடராசர் வள்ளி தெய்வயானையுடன் முருகர் போன்றோர் வீற்றிக்கிரார்கள். இங்குள்ள திருமேனிகளுள் முருகப்பெருமானின் திருமேனி அற்புதமானது. முருகப்பெருமான் வச்சிரதையும் வேலையும் தாங்கி இடக்காலால் மயிலை மிதித்தவாறு காட்சி தருகிறார். இறைவன் சன்னதி கருவறையில் பாம்புரேசுவரர் இலிங்க வடிவாய் எழுந்தருளியிருக்கிறார். ஆதிசேடன் (உற்சவர்) ஈசனை தொழுதவண்ணம் கருவறையில் எழு:ந்தருளியுள்ளார். இக்கருவறையை சுற்றிலும் அகழி உள்ளது. அகழியை மூடி மூன்று புறமும் மண்டபம் உள்ளது. சேடபுரீஸ்வரர் கோயில் கருவறை அதிட்டனத்தில் யாளிவரிசை காணப்படுகிறது. அர்த்தமண்டபத்தில் வடக்குக் கோஷ்டத்தில் புதிதாகத் துர்க்கை ஸ்தாபிக்கபட்டுள்ளாள். இராகுவும் கேதுவும் திருக்கோயிலின் ஈசானிய மூலையில் ஏகசரிரமாகி ஈசனை நெஞ்சில் இருத்தி தனிச்சன்னதியில் எழுந்தருளியுள்ளர்கள்.
தல தீர்த்தமான ஆதிசேஷ தீர்த்தம் கோயிலின் எதிரில் உள்ளது. தீர்த்தத்தின் நடுவே, ஆதிசேஷன் சுதை வடிவம் வைக்கப்பட்டுள்ளதைக் காணலாம். காவிரி ஆற்றின் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 59 வது தலம் இது. ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம்.
தரிசன நேரம்: இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
அருகிலுள்ள ரயில் நிலையம் : பேரளம் ( மயிலாடுதுறை-திருவாரூர் )
மினி பேருந்து வசதி : உண்டு ( ஷேர் ஆட்டோ வசதி )
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு