வெள்ளலூர்

	


		
 
	
 
7:48:32 AM         Thursday, February 25, 2021

வெள்ளலூர்

வெள்ளலூர்
வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர் வெள்ளலூர்
Product Code: வெள்ளலூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                             வெள்ளலூர், தேனீஸ்வரர் 

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோவையை அடுத்த வெள்ளலூர் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது. கோவை காந்திபுரம், உக்கடம்,  சிங்கா நல்லூரில்இருந்து வெள்ளலூர் செல்வதற்கு டவுன் பேருந்து இருக்கிறது.  

இறைவன் : தேனீஸ்வரர்

உற்சவர் : பிரதோஷமூர்த்தி  

இறைவி :  சிவகாமி சுந்தரி

தல விருட்சம்  : வன்னி மரம்

தல சிறப்புகள் :  கருவறையில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் தேனீஸ்வரர். இது சுயம்புமூர்த்தி ஆகும். காமதேனு, சூரியன் வழிபட்டு பேறு பெற்ற திருத்தலம்.  முன்பு சோலைகள் சூழ்ந்த இந்த தலத்தில் தேனீக்கள், தேனை தேனடையில் சேமிக்காமல், சுயம்புலிங்கத்தின் மீது அபிஷேகம் செய்ததால் மூலவருக்கு தேனீஸ்வரர் என்று பெயர் வந்ததாக தெரிவிக்கின்றனர். மூர்த்தி, தலம், தீர்த்தம் மூன்றுமே சிறந்து விளங்குவதால் இத்தலம் ஆற்றல் மிகுந்த சாநித்யம் வாய்ந்த தலமாக விளங்குகிறது. சனி ராகு கேது தோஷ பரிகாரத்திற்கு திருநள்ளாறு தலத்திற்கு இணையான தலமாக விளங்குவதாகத் தெரிவிக்கின்றனர். சித்திரை முதல் நாள் அன்று காலை சூரிய கதிர்கள் மூலவர் மீது பரவி ஒளி வீசும் காட்சி கண்களை விட்டு அகலாத காட்சியாகும். இதனால் இதனை பாஸ்கர க்ஷேத்திரம் எனவும் அழைக்கின்றனர்.

கோயில் அமைப்பு :  இத்தலம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் நிறுவப்பட்ட தோரணவாயில் தற்போதும் அதே நிலையில் உள்ளது. பொதுவாக ராஜகோபுரம் 3,5 அல்லது ஏழு நிலைகளைக் கொண்டதாக இருக்கும். ஆனால் இங்குள்ள ராஜகோபுரம் மற்ற கோபுரங்களிலிருந்து மாறுபட்டு உள்ளது. முதல் நிலையில் நாகாபரணத்துடன் கூடிய சிவ லிங்கமும், லிங்கத்திற்கு முன் சிவ பெருமானின் நடன கோலமும் இடம் பெற்றுள்ளன. பக்தர் ஒருவரின் கனவில் இக்கோலத்தில் தோன்றி காட்சி கொடுத்ததால் அந்த பக்தரே இச்சிலையை உருவாக்கி உள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர். அதற்கு மேல் நான்கு புறமும் சிறிய கோபுரங்களை அமைத்துள்ளனர்.

கோயில் உள்ளே நுழைந்தவுடன் சுற்று சுவற்றை ஒட்டி இடது புறம் மேற்கு நோக்கிய நிலையில் மிகச் சிறிய சந்நிதியில் ஜோதிலிங்கேசர் வீற்றுள்ளார். இவரை வணங்கிய பின் தான் உள்ளே செல்ல முடியும். ராமலிங்க அடிகளார் வழிபட்ட லிங்கமாகும். கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர் லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் வீற்றிருக்க சூரியன், ஜோதிலிங்கேசர், 63 நாயன்மார்கள். அகஸ்தியர், சித்தி விநாயகர், பஞ்ச லிங்கேசர், பாலமுருகன், சண்டிகேஸ்வரர், சந்திரன், காலபைரவர் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரகம் ஆகியோர் தனிச் சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர். அடுத்ததாக கொடிக்கம்பமும், நந்தி மண்டபமும் உள்ளன. எட்டுத் தூண்களைக் கொண்ட மகா மண்டபத்தில் தென்பகுதியில் விநாயகர் சந்நிதி உள்ளது. அர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் மூலவர் சுயம்பு தேனீஸ்வரர் நாகாபரணத்துடன் எழுந்தருளி உள்ளார். இக்கருவறைக்கு வடக்கு பக்கம் அன்னை சிவகாம சுந்தரி நின்ற கோலத்தில் அருள்புரிகின்றார். ஒரே கோபுரத்தின்கீழ் தனித்தனி சந்நிதிகளில் வீற்றிருப்பது அபூர்வம். இவ்வாறு சேர்ந்து இருந்தால் மட்டுமே வலம் வரலாம் என்பது ஐதீகம்.

சிவகாம சுந்தரியின் சன்னிதி முன்பாக சங்கரநாராயணன் திருமேனி உள்ளது. தேவலோக பசுவான காமதேனு வந்து வழிபட்ட பெருமைக்குரியதால் தேனீசர் என அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் ஒரு காம்பில் 5 இலைகள் கொண்ட மந்தாரை மரத்தில் பூக்கும் இளம் சிவப்பு வர்ணத்தில் உள்ள பூக்களை பூஜைக்கு பயன்படுத்தி துதித்தால் ராகு கேது தோஷத்தின் தாக்கம் குறைவதாக நம்புகின்றனர். மேலும் இந்த மரப்பொந்தில் இருந்து ஒரு நாகம் வந்து கோமுகம் வழியாக கருவறைக்குச் சென்று ஈசனை வழிபட்டு திரும்புகிறது. தல விருட்சம் வன்னி மரம். இங்கு ஆண், பெண் என இரு மரங்கள் இருப்பது விசேஷம். கோவிலின் முகப்பில் தோரணக்கல்லில் 2-ம் நூற்றாண்டை சேர்ந்த பராந்தகசோழன் பற்றி செய்திகள் வட்டெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழைந்தவுடன், வெளியே கல்யாண விநாயகர் சன்னிதி உள்ளது. நுழைவு கோபுரத்தின் இடப்புறம் அருட்பெருஞ்ஜோதி உள்ளது. இதற்கு கீழே ஒரு சிவலிங்கம் இருக்கிறது. அந்த சிவலிங்கத்தின் கீழே பெரிய சுரங்கப்பாதை இருந்ததாக கூறப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதிக்கு அருகே சூரிய பகவான் தனி சன்னிதியில் எழுந்தருளி உள்ளார்.

தல வரலாறு : இந்த திருத்தலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் வந்து திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். எப்போது கோவில் தோன்றியது அது பற்றிய தகவல்கள் இல்லை. இங்குள்ள விநாயகர் சிலை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பராந்தகசோழன் கல்வெட்டு கிடைக்க பெற்று இருப்பதும், கோவிலின் தொன்மையை காட்டுகிறது. கடந்த 1310-ம் ஆண்டு மாலிக்கப்பூர் படையெடுப்பின் போது கோவிலில் உள்ள சில விக்கிரகங்கள் சூறையாடப்பட்டதாக என்ற வரலாற்று செய்தியும் கூறுகின்றன. கரிகாலச் சோழனும் இந்த தலத்தில் திருப்பணிகளை செய்திருக்கிறார். 3-ம் கரிகால சோழன் காலத்தில் சிங்கத்தம்மன் என்பவர் கோவிலில் தீப வழிபாட்டுக்காக 20 களஞ்சி பொன் தானமாக வழங்கியதாகவும் வரலாற்று ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோவிலில் தல விருட்சம் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். உப தல விருட்சமாக மந்தார மரம் உள்ளது. எப்படி காக்கும் கடவுள் விஷ்ணு, படைக்கும் கடவுள் பிரம்மா கண்டறிய முடியாத அடிமுடியாய் காட்சியளித்தாரே பரபிரம்மா சிவன். அது போல் தான் இந்த திருத்தலத்தின் தோற்றமும் உணர முடியாத நிலை உள்ளது. கொங்கு நாட்டில் உள்ள தொன்மையான சிவ தலங்களுள் ஒன்று தேனீஸ்வரர் கோயில். ரோமானியர் காலத்து காசுகள், மோதிரங்கள் இரண்டு மணிகள், தங்க தாம்பாளம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரோமானியர்கள் இங்கு வந்து வாணிபம் செய்தது புலனாகிறது. காஞ்சி மாநதி எனும் நொய்யல் நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

சர்க்கார் அக்ரஹாரம், சதுர்வேத  மங்கலம் வெள்ளலூர் என பல பெயர்களால் வழங்கப்பட்டதாக வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள வெள்ளலூர் எனும் பெயரே நிலைத்து விட்டது. கரிகாலச் சோழன் ஆட்சி செய்த காலத்தில் அரசிளங்குமரன் தெருவில் தேரை ஓட்டிச் சென்ற போது ஒரு பசுக்கன்றின் மீது தேர் சக்கரம் ஏறி அக்கன்று, அவ்விடத்திலேயே மாண்டது. அதற்குத் தண்டனையாக தன் மகனைத் தேர் ஓட்டிக் கொன்றான். இக் கொலையால் அரசனுக்கு விருமத்தி தோஷம் பிடித்தது. அதைப் போக்குவதற்கு காமாக்ஷி என்ற குறித்தியிடம் குறி கேட்க, கொங்கு நாட்டில் மக்களைக் குடியேற்றி, கோயில்களைக் கட்டி திருப்பணி செய்தால் விருமத்தி தோஷம் தொலையும் எனக் கூறினாள். அதன்படி கரிகாற் சோழன் தன் பரிவாரங்களான சேரன் சமய முதலி, கத்துரி ரங்கப்பசெட்டி ஆகியோருடன் கொங்குநாட்டிற்குப் புறப்பட்டான். கரூரில் தொடங்கி ஒவ்வொரு சிவன் கோயில்களையும் ஊர்களையும் தோற்றுவித்து வெள்ளலூருக்கு வந்து சேர்ந்தனர். தன் பரிவாரங்களுடன் வெள்ளை என்கிற இருளன் பதிவனத்திற்குச் சென்றனர். அங்கு கோயில் கட்டுவதற்காக வனத்தை அழித்து சுத்தம் செய்யும் போது சுயம்புவாக ஒரு சிவலிங்கத் திருமேனியைக் கண்டனர். சோழன் கொங்கு நாட்டிற்கு வந்து போது அப்பகுதி அடர்ந்த வனமாக இருந்தது. ஆங்காங்கு இருளர்கள் பதிகளை கட்டிக்கொண்டு வேட்டையாடி பிழைத்து குலதெய்வத்திற்கு கோயில் கட்டி வழிபட்டு வந்தனர். அவ்வனத்தில் குடி இருந்த இருளன் வெள்ளையன் பெயரில்  வெள்ளலூர் எனும் ஊரையும் உருவாக்கி பல்வேறு குலத்தவர்களையும் குடி அமர்த்தினார். கோயிலையும் கட்டி முடித்தனர். கோயிலுக்கு அருகே குளம், கோட்டை மற்றும் பேட்டை ஆகியவற்றை உருவாக்கினார். ஊரை நிர்வாகம் செய்ய அதிகாரிகளையும் நியமித்தார். உத்தம பண்டிதரை வரவழைத்து தேனீஸ்வரமுடையாருக்கு அஷ்ட மந்திர பிரதிஷ்டையும் செய்யப்பட்டது. கோயில் பூஜைகள், திருவிழாக்கள் தங்கு தடையின்றி நடந்து வர கோயிலுக்கு மானியமாக வயல்களையும்  பூமிகளையும் தானமாக அளித்து ஓலைப்பட்டயம் வழங்கினார். கோயில் பூஜைகளும் திருவிழாக்களும் தங்கு தடையின்றி நடந்து வரலாயிற்று.

இந்த கோவிலில் பிரதோஷம், சங்கடஹரசதுர்த்தி, ஐப்பசி பவுர்ணமி, கார்த்திகை மாத சோமவார நாட்கள், பங்குனி உத்திரம், சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, பைரவாஷ்டமி, கிருத்திகை உள்ளிட்ட நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த தலத்துக்கு திருமண பாக்கியம் வேண்டி வரும் பெண்கள், மூலவர் தேனீஸ்வரருக்கு மாலை வாங்கி பூஜிக்க வேண்டும். அப்போது உடன் அவரது ஜாதக நகலையும் கொண்டு வர வேண்டும். மாலையை சிவனுக்கு அணிவித்தும், ஜாதக நகலையும் அவரது திருபாதத்தில் வைத்து சிவாச்சாரியார் பூஜை நடத்தி பின்னர், சிவனுக்கு அணிவிக்கப்பட்ட மாலையை, அந்த பெண்ணுக்கு அணிவிக்கின்றனர். திருமண வரம் கேட்டு வந்த பெண், பின்னர் அன்னை சிவகாமி சுந்தரியை தரிசித்து விட்டு கோவிலை வலம் வந்து அந்த மாலையுடன் வீடு திரும்புகிறார். வீட்டில் சாமியிடம் இருந்து தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை அங்குள்ள பூஜை அறையில் பத்திரப்படுத்துகிறார். பின்னர் திருமணம் முடிந்த பிறகு அந்த மாலையை தனது வருங்கால கணவருடன் கோவிலுக்கு வந்து சாமிக்கு திரும்ப ஒப்படைத்து வேண்டுதல் நிறைவேறியதற்கு பூஜை செய்து நன்றி தெரிவித்து வழிபடுகின்றனர். இதே போல் திருமணம் வேண்டி வரும் ஆண்களுக்கு அன்னை சிவகாமி சுந்தரி கழுத்தில் கிடந்த மாலை அணிவிக்கப்படுகிறது. சுவாமியும், அம்பாளும் தாங்கள் அணிவித்த மாலையை பெற்று கொண்ட பக்தர்களுக்கு திருமண காரியத்தை விரைந்து நடக்க ஒருவருக்கொருவர் உத்தரவிடுவதாக ஐதீகம். இந்த பிரார்த்தனை விரைந்து கைக்கூடுவதாக இந்த தலத்திற்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  கோயம்புத்தூர் 

பேருந்து வசதி  : உண்டு 

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×