பர்வதமலை

	


		
 
	
 
1:09:16 PM         Friday, May 14, 2021

பர்வதமலை

பர்வதமலை
பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை பர்வதமலை
Product Code: பர்வதமலை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                          பர்வதமலை, மல்லிகார்ஜூனர்

திருத்தல அமைவிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இந்த பருவத மலைக்கு செல்ல நேரடி பஸ் வசதி உள்ளது. 

இறைவன் :  மல்லிகார்ஜூனர்

இறைவி : பிரமராம்பிகை

தல தீர்த்தம் : பாதாள சுனைத் தீர்த்தம்

தல சிறப்புகள் : திருவண்ணாமலை போல் இங்கும் 26 கிலோ மீட்டர் பௌர்ணமி கிரிவலம் நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள இந்த மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்கிறார்கள். ஆஞ்சநேயர் இமயத்திலிருந்து சஞ்சீவிமலையைத் தூக்கி வரும்போது விழுந்த ஒரு துளி தான் இந்த மலை என்றும் கூறுவதுண்டு. சிவனின் கருவறையிலிருந்து கோயிலைச் சுற்றி நறுமண மலர்களின் வாசனையை நுகரலாம். அம்மன் அழகு வேறெங்கும் காணமுடியாத பேரழகு. இரவு அம்மன் கன்னத்தில் ஜோதி ஒளியைக் காணலாம். அம்மன் கருவறையிலிருந்த பின்நோக்கி செல்ல அம்மன் உயரமாக காட்சி தந்து நேரில் வருவதுபோல் இருக்கும். மலை உச்சியில் ராட்சத திரிசூலம் உள்ளது. தலைக்கு மேலே மேகம் தவழ்ந்து போவதைக் காணலாம். 

 

தல வரலாறு : திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் பகலிலேயே மக்கள் போக முடியாத ஒரு அடர்ந்த மலை பகுதி. மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு. இம்மலைமீதுள்ள மல்லிகார்ஜுனர், பிரமராம்பிகை கோயில் கி.பி. 3ம் நூற்றாண்டில் நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியதாக இக்கோவிலில் உள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. பர்வதமலை மிக உயரமான சிகரத்தை உடையதால், `பர்வதகிரி' என்றும், இம்மலையில் மிகச்சிறந்த பல அரிய மூலிகைகள் நிறைந்திருப்பதால், `சஞ்சிவிகிரி' என்றும், ஒரு காலத்தில் அகத்தியரால் இம்மலையில் திரிசூலம், நாட்டப்பட்டதால் `திரிசூலகிரி' என்றும், பர்வதராஜன் மகளாகிய பார்வதி தேவி இங்கு வந்து தங்கியதால், `பர்வதம்' எனவும் பெயர் பெற்றிருக்கிறது.

சிலர் இம்மலையை `ஸ்ரீசைலம்' என்றும் அழைப்பதுண்டு. மகாலட்சுமி திருமாலைத் திருமணம் புரிவதற்காகப் பல இடங்களில் தவம் செய்து அது முடியாமற் போகவே அதன்பின் இப்பர்வதமலையைத் தேர்ந்தெடுத்து, இங்கு வந்து தவம் செய்தார். இதனைக் கண்ட சிவபெருமான், பர்வதமலையில் தவம் செய்யும் மகாலட்சுமியை உடனே திருமணம் செய்து கொள்வாயாக என்று திருமாலுக்கு எடுத்துரைக்க, அதன் பின்னர் திருமகள் திருமணம் மிகவும் சிறப்புடன் நடந்தேறியது. இதனால் இம்மலைக்குச் சென்று வருபவர்கள் தங்களின் எண்ணம் ஒவ்வொரு முறையும் நிறைவேறுவதை உணர்கின்றனர். இதற்குக் காரணம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியே இங்குத்தவம் செய்ததால் தான். தவம் செய்து அதன் பலனால் மகாலட்சுமியின் எண்ணம் ஈடேறியதால், இம்மலை `மங்களமலை' என்று அழைக்கப்படுகிறது. 

சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து தன்னை யாரும் வெல்லக்கூடாது என வரம் பெற்ற சூரபதுமன் தனது தவவலிமையால் தேவர்களை கொடுமை செய்தான். இதனால் ஈசனின் உத்தரவுப்படி முருகப்பெருமான் பர்வதமலையை சுற்றிவந்து தென்பாதிமங்கலம், காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், எலத்தூர், பூண்டி, குருவிமலை ஆகிய 7 ஊர்களில் லிங்கத்தை நிறுவி வழிபட்டார். இதனால் இந்த மலை கந்தமலை என்ற பெயர் பெற்றது. அதுபோல அகத்தியருக்கு இந்த மலையில்தான் ஈசன்முதன் முதலில் தன் திருமண காட்சியை காட்டினார். அந்த மலையில் அகத்தியர் திரிசூலத்தை நட்டதால் அது திரிசூலமலை என்று கூறப்படுகிறது. 

கோவில் அமைப்பு : மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கி.மீ தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலை ஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர். இந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை நீர் ஊற்று உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே  கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.

இம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத் தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.

இந்த மலை கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது. இம்மலையைச் சுற்றிலும் ஏழுசடைப்பிரிவுகள் உள்ளன. பர்வத மலையின் முன்பாகம் தென்மாதி மங்கலத்திலும், பின்பாகம் கடலாடி கிராமத்திலும் உள்ளள. எனவே இரு வழிகளிலும் மலையேறலாம். இந்த மலையானது, சில கோணங்களில் இருந்து பார்க்கும்போது திரிசூலவடிவில் தெரிவதால், இதனைத் `திரிசூலகிரி' என்றும் கூறுகின்றனர். இம்மலையில் உள்ள தெய்வத்துக்கு ஒரு முறை தீபமேற்றி வணங்கினால், வருடத்தில் 365 நாட்களுக்கும் தீபமேற்றி வைத்து வழிபட்ட பலன் கிடைக்கும்.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன், 12 கோடி சூரியர்கள் இரு கோடி அசுவணி தேவர்கள் மற்றும் தேவதைகள், 11 கோடி உருத்திரர்கள், 8 கோடி வசுக்கள், கோடி ரிஷிகள், 18 வகைகளைச் சேர்ந்த தேவ கணங்கள் ஆகிய அனைவரும் இம்மலையை வலம் வந்து அநேகதான தர்மங்கள் செய்ததால் தங்கள் துன்பங்கள் நீங்கப் பெற்று இன்புற வாழ்ந்து இறுதியில் இறைவன் பாதம் பெற்றனர். இம்மலை உச்சியிலுள்ள கோவில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப்புகழ் உடையது. தென்கைலாயம் என்று இந்த மலை போற்றப்படுகிறது. இந்த மலையானது அறம், பொருள், இன்பம், மோட்சம் இவை நான்கினையும் ஒரே இடத்தில் அளிக்கக் கூடிய பெருமை பெற்றது.

சித்தர்கள் இம்மலையில் இருக்கும் மல்லிகார்ஜுன சுவாமிக்கும் பிரமராம்பிகை அம்மனுக்கும் தினமும் இரவில் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலையில் அடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக சொல்வார்கள். ஆனால் பர்வதமலையில் பிடிக்கு ஒரு லிங்கம் இருப்பதாக கருதப்படுகிறது. இங்கு குகை நமச்சிவாயர், குருநமச்சிவாயர் ஆகியோர் கரு நொச்சியுண்டு இளமை பருவத்தை அடைந்தனர். இங்கு சித்தர்கள் இரவில் ஜோதி தரிசனம் காண்பதாக நம்பப்படுகிறது. தியானம் செய்வதற்கு இந்தமலை உகந்தமலையாகும். சித்தர்கள் தேனீக்கள் வடிவில் இந்தமலையில் உலவுவதாக சொல்கிறார்கள்.

பர்வதமலையில் ஒவ்வொரு பவுர்ணமியன்றும் இரவு நடுஜாமத்தில் பன்னிரண்டு சித்தர்கள் சங்கு, கஞ்சதாளம் முதலான இசைக்கருவிகளை இசைத்துக்கொண்டு வலம் வருவதாக இரவில் அங்கு வயலுக்குக் காவல் இருக்கும் விவசாயிகள் கூறுகின்றனர். இவர்களில் ஒருசிலரின் கண்களுக்கு வலம் வந்த சித்தர்கள் தென்பட்டதாகவும், சிலருக்கு இன்னிசை மட்டும் கேட்டதாகவும் சொல்கின்றனர். தவசிகள் யோகம் செய்வதற்காகவே சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இம்மலையில் ஆலயம் அமைத்து இதனை யோகமலை ஆக்கியிருக்கின்றனர். இந்த மலையில் சகலநோய்களையும் தீர்க்கும் `பாதாள சுனைத்தீர்த்தம்' உள்ளது. இச்சுனையின்கீழ் சூட்சும தேகத்தோடு செல்லக்கூடிய வழி உள்ளது. சித்தர்கள் தங்கும் தாமரைத் தடாகம், வாழைத் தோட்டம், காராம்பசு போன்றவை இங்கு உள்ளதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். பூண்டி மகான் இங்கு வந்து பாதிமலை ஏறும்போதே மலையை நோக்கியதும் சிவலிங்கம் தொடர்வடிவமாகக் காட்சி தரவே `காலால் மிதிப்பது கூடாது' என்று மலைமீது செல்வதை நிறுத்தி விட்டு மலையைச் சுற்றிச் கிரிவலம் மட்டும் செய்து விட்டு வணங்கிச் சென்றார் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் பர்வத மலையில் மலையேறு கையில் சித்தர்கள் ஓரிடத்தில் பூனை வடிவாகவும், வேறோர் இடத்தில் மான் வடிவாகவும் தரிசனம் தந்ததாகத் தென்மாதி மங்கலம், கடலாடிக் கிராமத்துப்பெரியவர்கள் கூறுகின்றனர். திருக்கழுக்குன்றத்தில் காண்பதுபோல் சில சமயம் இங்கும் சித்தர்கள் கழுகு வடிவத்தில் பாப்பாத்தி மலையைச்சுற்றிப்பறந்த வண்ணம் இருப்பதைக் காணலாம்.

பர்வதமலை மகான் மௌனயோகி விடோபானந்தர் குருஜி மடம் இங்கு வரும் பக்தர்களுக்குச் செய்யும் சேவைகள் மிகவும் போற்றப்பட வேண்டியவை. அவ்வளவு உயரத்தில் முற்றிலும் கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாகக் கட்டப்பட்ட மடம். கீழ் தளத்தில் பக்தர்கள் இரவில் வெளியில் குளிர் மற்றும் மழையில் சிரமப்படாமல் இரவு தங்கிச் செல்ல அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல் ஜெனரேட்டர் போட்டு சுடசுட உணவு அளிக்கிறர்கள். மேலே எந்தவிதமான மின் வசதியும் கிடையாது படுத்து உறங்கப் பாய்களும் தந்து உதவுகிறார்கள். மலைக்கு செல்ல 700 அடிக்கு செங்குத்தான கடப்பாறை படி, தண்டவாளப்படி, ஏணிப்படிகள் உள்ளன. பவுர்ணமி மற்றும் சாதாரண நாட்களிலும் பக்தர்கள் மலைக்கு சென்று தங்கி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அமாவாசையிலும் கூட மலையின் கீழ்ப்பகுதி முதல் உச்சி வரை இரவில் இறைவனுடைய ஒளி வழி காட்டுவது இங்கு மட்டும்தான்.

மனித உடலில் 6 ஆதாரங்களைக் கடந்து குண்டலினி சக்தி உச்சியில் உள்ள சதாசிவத்துடன் சேர்கிறது. அது போல் நாமும் கடலாடி மெத்தகமலை, குமரி நெட்டுமலை, கடப்பாறை மலை, கணகச்சி ஓடை மலை, புற்று மலை, கோவில் உள்ள மலை ஆகிய 6 மலைகளையும் கடந்து இங்குள்ள சிவ சக்தியினை தரிசித்தால் ஞானம் பெறலாம். 48 பவுர்ணமி, அமாவாசை தொடர்ந்து இந்த மலையில் உள்ள சிவ பார்வதியை தரிசித்தால் கைலாயத்தை தரிசித்த பலன் கிடைக்கும்.

காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமான நிலையம் :  சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் :  காட்பாடி, வாலாஜா ரோடு, திண்டிவனம் 

பேருந்து வசதி  : உண்டு   

தங்கும் வசதி : இல்லை 

உணவு வசதி : இல்லை 

Mail this page Printable view
×
×
×
×
×
×
×