அன்னம்புத்தூர், நிதீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் அன்னம்புத்தூர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது விக்கிரவாண்டி, பேரணி வழியாக சுமார் 40 கி.மீ பயணித்தால் இத்தலத்தை அடையலாம். திண்டிவனத்தில் இருந்து வராகப்பட்டு வழியாக 10 கி.மீ பயணித்தால் கோவிலை அடையலாம். வரகுப்பட்டில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.
இறைவர் : நிதீஸ்வரர்
இறைவி : ஸ்ரீகனகதிரிபுரசுந்தரி
தலச் சிறப்புகள் : பிரம்மனின் தலையெழுத்தையே மாற்றி எழுதிய சிவன் வீற்றிருக்கும் தலம் என்பது சிறப்பாகும். செல்வங்களின் கடவுளாக போற்றப்படும் குபேரன் தனக்கு நிதி வேண்டி வணங்கிய தலம் இது. மேலும், சோழர்களால் கட்டப்பட்ட இக்கோவிலில் பிரம்மாவுக்கு திருவுருவச் சிலை காணப்படுவது வேறெங்கும் காண முடியாத சிறப்பாகும்.
புராண வரலாறு : பிரம்ம புராணத்தின்படி பிரம்மா சுயம்புவாகத் தோன்றி இந்த உலகத்தையும், சொர்க்கத்தினையும் படைத்தார். ஆகாயம், திக்குகள், காலம், உணர்வு ஆகியவற்றைப் பூமியிலும், சொர்க்கத்திலும் உருவாக்கினார். தன்னுடைய மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலகர், புலஸ்தியர், கிரது முதலிய சப்த ரிசிகளையும் படைத்தவர். சுவயம்புமனு என்ற முதல் ஆணையும், சதரூபை என்ற முதல் பெண்ணையும் பூமியில் படைத்தார். இவர்களின் மகன் மனு என அறியப்படுகிறது. மனுவின் வம்சம் என்பதாலேயே மனுசன் என்றும் மானிடர் என்றும் பெயர் வந்ததாகத் தெரிகிறது. வரம் தரும் பிரம்மன் மும்மூர்த்திகளுள் ஒருவர் என்பதால், வரம் கொடுக்கும் தகுதியுடைய கடவுளாக பிரம்மா உள்ளார். அரக்கர்களுக்கு வேண்டிய வரத்தினை தருபவராகவும், அவர்கள் பெற்ற வரத்தின் காரணமாக அவர்கள் அழிவதற்கு உறுதுணையாகவும் இருக்கிறார். பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சணையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்திரர்களை பிரம்மா உருவாக்கினார் என மகாபுராணங்களில் ஒன்றான சிவமகாபுராணம் கூறுகிறது. புண்ணியத் தலம் பிரம்மாவை ஆலயங்களில் வழிபடக் கூடாது என்ற சம்பிரதாயம் நடைமுறையில் இருந்து வருகிறது. புண்ணிய பாரதத்தில் ஒன்றிரண்டு கோவில்கள் தவிர்த்து, பிரம்மாவுக்கு வேறு ஆலயங்கள் கிடையாது. பிரம்மனை மட்டும் தனியாக வழிபடும் நடைமுறை இல்லை. இப்படி இருக்க இத்தலத்தில் பிரம்மனுக்கு உருவ வழிபாடு இருப்பது அதிசயங்களில் ஒன்றாகவே உள்ளது.
கோவில் அமைப்பு : சோழரின் கலையம்சம் ராஜராஜ சோழரால் தமிழகத்தில் பல பகுதிகளில் பல கோவில்கள் கட்டமைக்கப்பட்டுள்ன. இதனைச் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட கோவில்களின் கல்வெட்டுகளில் இருந்தும், கலைநயத்தில் இருந்தும் அறிய முடிகிறது. அவ்வாறு சோழர் கட்டிய கோவிலில் அம்மனவே வியந்து வணங்கிய கோவில்தான் அன்னம்புத்தூரில் உள்ள நிதீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளின் அடிப்படையில் இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் என கண்டறியப்படுகிறது. மாமன்னன் ராஜராஜ சோழன் திருப்பணிகள் செய்து நிவந்தங்கள் அளித்த புராணப் பெருமை கொண்ட ஆலயம் இது. 1008-ஆம் வருடம், தன்னுடைய 23-வது ஆட்சியாண்டில், அன்னம்புத்தூர் கோயில் ஸ்ரீநிதீஸ்வரருக்கு ராஜராஜ சோழ மன்னன் திருப்பணி செய்ததைத் தெரிவிக்கிற கல்வெட்டுகள் உள்ளன. பிரம்மாவின் சாபம் நீங்குவதற்காக, அவர் இங்கே பிரம்ம தீர்த்தக் குளத்தை உருவாக்கி, தினமும் சிவபூஜை செய்து, கடும் தவம் புரிந்து, சாபத்தில் இருந்து விமோசனம் பெற்றார். ஒருகாலத்தில், திருவண்ணாமலை திருத்தலத்துக்கு இணையானதாகப் போற்றப்பட்டது. கருங்கல் திருப்பணிகள், அதில் அழகழகாய் சிற்ப நுட்பங்கள், கோஷ்டத்தில் அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் என பொலிவுடன் திகழ்கிறது.
அம்பாள் ஸ்ரீகனகதிரிபுரசுந்தரி கருணையே வடிவெனக் கொண்டவள். பேரழகி. இவளுக்கு செவ்வாய், வெள்ளிகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால், தடைப்பட்ட மங்கல காரியங்கள் யாவும் விரைந்து நடக்கும். மாலையில், சிவனாருக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன் பிறகு, சிவலிங்கத் திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகமும் அலங்காரமும் நடைபெறும். அன்னாபிஷேக வைபவத்தை அடுத்து, அனைவருக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்படும். சிவபெருமானுக்கு உகந்த நாட்களாகப் பிரதோஷம் மற்றும் சிவராத்திரி அன்று இத்திருத்தலத்தில் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாட்களில் மூலவர் மற்றும் சன்னதியில் உள்ள கனகதிரிபுரசுந்தரி ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் செய்யப்படுகின்றன.
இல்லறத்தில் ஐஸ்வர்யங்கள் பெருகவும், குழந்தை வரம், தொழிலில் முன்னேற்றம், வீடு, வாகன யோகம் உள்ளிட்டவை கிடைக்கவும், சூனியம் உள்ளிட்ட கெடுதல்களில் இருந்து விலகவும் இங்கு பிரார்த்தனைகள் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர். பூச நட்சத்திரம், பவுர்ணமி உள்ளிட்ட தினங்களில் இத்தலத்தில் உள்ள சிவ பெருமானை வழிபட்ட அர்ச்சனை செய்து வழிபட்டால் கடன் தொல்லை விலகும். குழந்தை வரம் வேண்டுவோர் அம்பாளின் பாத அடியில் வெண்ணெய் வைத்து வேண்டிவர குழந்தை பாக்கியம் கிடைக்கும். இக்கோவிலில் மேற்கு நோக்கியவாறு உள்ள ஈசனின் நேர்ப்பார்வையில் அமைந்துள்ள காலபைரவரை தேய்பிறை அஸ்டமி நாட்களில் நெய் தீபம் வைத்து வேண்டுவதன் மூலம் குடும்பச் சண்டைகள் தீர்ந்து, தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள ரயில் நிலையம் : திண்டிவனம்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு