விரிஞ்சிபுரம், மார்க்கபந்தீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் வேலூர் மாவட்டத்தில் ஆம்பூர் செல்லும் சாலையில் 1 கி. மீ. சென்றால் விரிஞ்சிபுரத்தை அடையலாம். வேலூரில் இருந்து மேற்கே 15 கி.மீ. தூரத்தில் பாலாற்றங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இறைவன் : மார்க்கசகாயர், மார்க்கபந்தீஸ்வரர்
இறைவி : மரகதவல்லி, மரகதாம்பிகை
தல விருட்சம் : பனை
தல தீர்த்தம் : சிம்ம தீர்த்தம்
தல சிறப்புகள் : திருவண்ணாமலையில் ஜோதியாய் நின்ற ஈசனின் திருமுடியைக் கண்டதாக பொய் சொன்ன பிரம்மனுக்கு, சிவபெருமான் சாபமிட்டார். அந்த சாபத்தை நீக்கும் பொருட்டு, பிரம்மதேவன் வழிபட்ட தலம் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் ஆலயம் என்பது தல புராண சிறப்பாகும். பிரம்மா, இந்த ஆலயத்தின் அர்ச்சகரின் மகனாகப் பிறந்து, ஆலய இறைவனை பூஜித்து சாபம் நீங்கப் பெற்றாராம். பிரம்மனுக்கு விரிஞ்சன் என்ற பெயரும் உண்டு. எனவே தான் இந்த ஆலயம் ‘விரிஞ்சிபுரம்’ என்றானது. அருணகிரிநாதர், திருமூலர், பட்டினத்தார், கிருபானந்த வாரியார், எல்லப்பா தேசிகர் உள்ளிட்டோர் பாடல் பெற்ற திருத்தலம்.
தல வரலாறு : கரபுரம் என்னும் வைப்புத் தலமாக விரிஞ்சிபுரம் குறிக்கப்படுகின்றன. கரன் வழிபட்டதால் கரபுரம் என்றும், பிரமன் வழிபட்டதால் விரிஞ்சிபுரம் என்றும் பெயர் பெற்றது. மைசூரைச் சேர்ந்த ஒரு வணிகர், இத்தலம் வழியாக காஞ்சீபுரம் சென்று மிளகு வியாபாரம் செய்வது வழக்கம். ஒரு முறை வியாபாரத்திற்காகச் சென்றபோது, வணிகர் இந்த ஆலயத்தில் தங்க நேரிட்டது. அவர் திருடர்களிடம் இருந்து தன்னைக் காத்து உதவும்படி வேண்டினார். இறைவனும் வேடன் உருக்கொண்டு, வணிகருக்கு வழித்துணையாக வந்ததாக தல வரலாறு சொல்கிறது. எனவேதான் இத்தல இறைவனுக்கு ‘வழித்துணை நாதர்’ என்றும் பெயர் வந்தது.
விரிஞ்சிபுரம் ஈசனுக்கு பூஜை செய்து வந்த, சிவநாதன்- நயனாநந்தினி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், பிரம்மதேவன். சிவசர்மன் எனப் பெயரிடப்பட்ட அவர், தன் ஐந்தாம் வயதில் தந்தையை இழந்தார். சிறுவனாய் இருந்ததால் ஆலயத்திற்கு பூஜை செய்யும் உரிமையை, உறவினர் பறித்துக்கொண்டனர். இதனால் கவலையுற்ற சிவசர்மனின் தாயார், இத்தல ஈசனிடம் வேண்டினார். அவர் கனவில் சிவபெருமான் தோன்றி, ‘ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் சிவசர்மனை நீராட்டிக் காத்திரு. நான் வந்து உனக்கான வழியைக் காட்டுகிறேன்’ என்றார். நயனா நந்தினி கனவு கண்ட மறுநாள், கார்த்திகை மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும். அந்த நாளில் ஒரு முதியவர் உருவில் வந்த ஈசன், சிவசர்மனுக்குப் பூணூல் அணிவித்து வேத சாஸ்திரங்கள் புகட்டி, சிவதீட்சை அனைத்தும் செய்து மறைந்தார். பிரம்மனுக்கு, சிவபெருமானே சிவ தீட்சை அளித்த திருத்தலம் என்ற பெரும் சிறப்புடையதாக இந்த ஆலயம் திகழ்கிறது.
பின்னாளில் சிறுவன் சிவசர்மன் பூஜை செய்யும் பொருட்டு ஆலயத்தை நெருங்கியதும், பூட்டியிருந்த ஆலயக் கதவும் திறந்துகொண்டது. பின்பு சிறுவன் சிவசர்மன் விரிஞ்சிபுரம் வழித்துணை நாதருக்கு அபிஷேகம் செய்ய எண்ணினான். ஆனால் சிறுவனான அவனது உயரம் குறைவு என்பதால் வருந்தினான். சிறுபாலகனின் வருத்தம் அறிந்த ஈசன், சிவலிங்கத்தின் மேல் பகுதியான பாணத்தைச் சாய்த்து, சிவசர்மன் செய்த அபிஷேகத்தை ஏற்றுக் கொண்டார். சிருஷ்டி கர்த்தாவாக விளங்கும்போது, திருஅண்ணாமலையில் பிரம்மனுக்குக் காட்டாத திருமுடியை, அதே பிரம்மன் சிறுவனாக வந்து விரிஞ்சிபுரத்தில் வருந்தியபோது ஈசன் தலை சாய்த்து காட்டியருளினார். அந்த சிறப்பு மிக்க நாள் கார்த்திகை கடைசி ஞாயிறு ஆகும்.
கோவில் அமைப்பு : பிராகாரத்தில் சிம்ம தீர்த்தம் உள்ளது. சுதையால் செய்யப்பட்ட பெரிய சிம்மத்தின் வாயினுள் செல்வது போலப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிராகாரத்தின் இருகோடியிலும் சிற்பக் கலையழகு வாய்ந்த இரு கல்யாண மண்டபங்கள் உள்ளன; இவையிரண்டிலும் பங்குனிப் பெருவிழாவில் சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.இதையடுத்து நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. பிராகாரத்தில் பல சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. அவற்றில் ஒன்று பஞ்சமுக லிங்கமாகவுள்ளது. இவற்றுக்கு மத்தியில் காரைக்காலம்மையார் மூர்த்தம் மட்டும் உள்ளது. சுவாமி சந்நிதி உள்சுற்றில் நால்வர், பொல்லாப்பிள்ளையார், நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார் தொடர்ந்து அறுபத்து மூவர் மூலத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. கருவறை கஜப்பிரஷ்டை அமைப்புடையது. மூலவர் பெரிய ஆவுடையாரில் உயரமான பாணத்துடன் கம்பீரமாக காட்சிதருகிறார். நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடக்கின்றன. பாலகனாகத் தோன்றிய பிரம்மா இத்திருத்தலத்தில், சிவபெருமானிடம் உபநயனம், பிரம்மோபதேசம், சிவதீட்சை ஆகியவற்றைப் பெற்றுள்ளார். எனவே அடியவர்கள் சிவதீட்சை பெற இதனைக் விட உயரிய தலம் வேறில்லை எனலாம். இங்குள்ள சிம்மக்குளம் தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரம், ஆதி சங்கரரால் ஸ்தாபனம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் இத்தீர்த்த குளம், கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு திறக்கப்படும். அதாவது கார்த்திகை கடைசி ஞாயிறு நள்ளிரவு 12 மணிக்கு இந்த தீர்த்தக் குளத்தில் குளித்தால், குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பதும், பேய், பிசாசு, பில்லி, சூனியம் போன்ற தீவினைகள் அகலும் என்பதும் நம்பிக்கை. முதலில் அருகில் உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, தொடர்ந்து சிம்ம வாய்முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மூழ்கி எழ வேண்டும். பின்னர் ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தில் ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் மலர் வடிவில் தோன்றி குழந்தை வரம் அருள்வார் என்பது ஐதீகம். அல்லது கனவில் மலர்கள், பழங்கள், புத்தாடைகள் ஆகியவற்றைத் தாங்கியபடி முதியவர் காட்சி தந்தாலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இப்படி வேண்டிக்கொண்டு குழந்தை வரம் பெற்றவர்கள், குழந்தை பிறந்த பிறகு, மரகதாம்பிகை அம்பாள் சன்னிதிக்கு எதிரில் உள்ள மண்டபத்தில் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.
காலை 6.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : ஆம்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு