பாக்கம், ஆனந்தீஸ்வரர்
திருத்தல அமைவிடம் : இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை திருநின்றவூருக்கு அருகில் சித்தேரிகரையில் அமைந்துள்ளது. இவ்வாலயத்திற்கு ஆவடியிலிருந்து அரசு பேருந்துகள் மற்றும் திருநின்றவூர் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து, ஷேர் ஆட்டோ மூலம் அடையலாம்.
இறைவன் : ஆனந்தீஸ்வரர்
தல விருட்சம் : கல்லாலமரம்
தல தீர்த்தம் : அகத்திய தீர்த்தம்
தல சிறப்புகள் : ஆனந்தீஸ்வரர் திருக்கோயில் அகத்தீஸ்வரரால் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமாகும். கருவறையில் லிங்கத்திருமேனி மரகதப்பச்சை நிறம் கொண்டிருப்பதுடன் தாமரை இதழ் வடிவ ஆவுடையாரில் எழுந்தருளி இருப்பது காண்பதற்கரிய வடிவமாகும். இறைவன் குபேர சம்பத்து உடையவர். அகத்தியர் தீர்த்த யாத்திரையாக தென்னகம் வந்தபோது பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டார். அவ்வகையில் அகத்தியர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றுதான் பாக்கம் கிராமம்.
கோவிலின் அமைப்பு : ராஜேந்திர சோழனால் கி.பி. 1022ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இவ்வாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தீஸ்வரருக்கு கூரையால் குடில் அமைத்து வழிபாடு செய்யப்பட்டது. பிறகு சில ஆண்டுகள் கழித்து சிறு கோயில் கட்டப்பட்டது. தற்போது கருங்கல்லினால் கோயில் எழுப்பப்பட்டு, மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. பத்து கால் மண்டபமும் எழுப்பப்படுகிறது.
வியாகாரமர், வித்யாபாதர், பதஞ்சலி முனிவர், கமல முனிவர், சிவஞான சித்தர் மற்றும் யோகிகள், ரிஷிகள் வழிபட்டு அருள்பெற்றுள்ளனர். இன்றைக்கும் பௌர்ணமி நாள்களில் இவர்கள் இங்கு வந்து இறைவனை வழிபடுவதாக நம்பப்படுகிறது. அகத்திய மாமுனிவர், கருவறையில் இறைவனை நோக்கி வணங்கியபடி நின்றகோலத்தில் அமைந்துள்ளார். மேலும் இங்கு நவக்கிரகங்கள், பரிவார மூர்த்திகள் கிடையாது. குரு தட்சிணாமூர்த்தி ஆனந்த குருவாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆனந்தவல்லி அம்மை தனி சந்நிதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். அம்பாள் அண்டிவரும் அடியவருக்கு சேயை காக்கும் தாயாக அமைந்துள்ளது சிறப்பு. கால பைரவர் ஆனந்த பைரவராக நின்ற கோலத்தில் இல்லாமல் சற்று நளினமாகச் சாய்ந்த வண்ணம் ஆனந்தநிலையில் எழுந்தருளி அருள்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் நாம் பிறந்த நட்சத்திர நாள்களில் வணங்கி வந்தால் அனைத்துவிதமான பிரச்னைகளும் நீங்கும்.
தீர்த்தத்தில் நீராடி இறைவனைத் தொழுதால் சகலவிதமான பிணிகளும் பாவங்கும் நீங்கும். மிகவும் கலைநயத்துடன் அமையப்பெற்றுள்ள மகா மண்டபத்தின்மீது 18 அடி உயரமுடைய சிவனின் திருமேனி தியானநிலையில் சுதை சிற்பமாக அமைந்துள்ளது சிறப்பாகும். மகாமண்டபத்தின் கூரையில் அஷ்ட நாகங்கள், ஆதிசேஷன், வாசுகி, கார்கோடன், அனந்தன் போன்ற நாகங்கள் அமைந்துள்ளன. மகாமண்டபத்தில் இந்த நாகங்களின் கீழே நின்று இறைவனை தரிசித்தால் நாகதோஷம், புத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகிய அனைத்து தோஷங்களும் விலகும். பௌர்ணமி நாள்களில் 108 முறை வலம் வந்து தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள் பயனடைந்த பக்தர்கள். மேலும் இங்கு இரண்டு முக ருத்திராட்ச மரம் உள்ளது. அதோடு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இறைவனுக்கு சந்தனம் அரைத்த கல் இன்றும் உள்ளது.
இவரைக் கண்டவுடன் நமது பாவங்கள் நீங்கி பெரும்பேறு கிடைப்பதுடன் பெருஞ்செல்வமும் காரியசித்தியும் உடனே உண்டாகும். இத்திருக்கோயில் தொண்டைநாட்டின் சிறந்த குரு ஸ்தலமாகவும் விளங்குகிறது. ஆலயத்தின் தலமரத்தின் ஐந்து இலைகளை எடுத்து வீட்டில் பூஜை செய்து வந்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். திருமணத்தடை, புத்திரப்பேற்றில் தடை உள்ளவர்கள் இவ்வைபவத்தில் கலந்துகொள்வதால் தடைகள் நீங்கப்பெற்று விரும்பியதை விரும்பியவண்ணம் அடைவர் என்பது கண்கூடு. ஆலயத்தில் மகாசிவாராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், பிரதோஷம், பைரவருக்கு அஷ்டமி பூஜை, பௌர்ணமி தோறும் விளக்கு பூஜை, திருக்கல்யாணம் ஆகியவை மிகச் சிறப்பாக நடைபெறும்.
காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : சென்னை
அருகிலுள்ள நிலையம் : திருநின்றவூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை