கைலாசநாதர் 

	


		
 
	
 
12:07:34 PM         Friday, May 14, 2021

கைலாசநாதர்

கைலாசநாதர்
கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர் கைலாசநாதர்
Product Code: கைலாசநாதர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                        காஞ்சிபுரம், கைலாசநாதர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில்  பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீ தொலைவில்  அமைந்துள்ளது. சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள,  பெரிய காஞ்சிபுரம் புத்தேரி தெரு வழியாக சென்று சற்றுத் தொலைவிலுள்ள இக்கோயிலை அடையலாம். 

இறைவன் : கைலாசநாதர்

இறைவி : காமாட்சி அம்மன்

வழிபட்டோர் : மகேந்திரவர்ம பல்லவன், இராஜசிம்ம பல்லவன், இரண்டாம் நரசிம்ம பல்லவன்

தலச் சிறப்புகள் : கருவறையில் மூலவர் பதினாறு பட்டைகளுடன் லிங்கத்திருமேனியாக உள்ளார். கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று புனர்ஜனனி என்றழைக்கப்படுகிறது. அதன் உள் மற்றும் வெளி வாயில்கள் குறுகலாக இருந்து தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று மீளும்போது புனர்ஜென்மம் எடுத்த நினைவு மேலோங்கி நிற்கும். இதனைச் சுற்றி வந்தால் மறு பிறவி இல்லை என்று பொருளாகும். மூலவர் சன்னதி கிழக்கு பார்த்த நிலையில் உள்ளது. மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். 

கோயில் அமைப்பு : கைலாசநாதர் கோயில் தான் இந்நகரில் உள்ள மிகப் புராதனமான கோயிலாகும். இது, சிவ பெருமானுக்காக, பல்லவ மன்னரான நரசிம்மப்பல்லவரால், எட்டாம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட கோயிலாகும். சிறப்பான கட்டுமானம் மற்றும் ஒளியில்லா ஒரு சிறு சந்நிதியின் நேர் மேலே அமையப்பெற்றுள்ள விமானம் ஆகியவற்றுக்காக பெரிதும் பேசப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மரச்சட்ட்ங்கள் பலவற்றில், சிவபெருமான், நடராஜர் தோற்றத்தில் காணப்படுகிறார். பல்லவர் காலத்து கோயில்களில் மட்டுமே நாம் காணும் சப்த மாதர், அஷ்டதிக் பாலகர்கள், ஏகாதச ருத்திரர்கள், கருட நரசிம்ம யுத்தம், பைரவி, இப்படி எண்ணற்ற மூர்த்தங்கள் வேறு எங்கும் நாம் காண முடியாதவை. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும்.

கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. போரில் சிங்கம் போன்றவன் என்ற பெருமை கொண்டவன். அதனைச் சுட்டிக்காட்டும்படி, எங்கு பார்த்தாலும் சிம்மங்களே கோயிலைத் தாங்கி நிற்பது போலக் காட்சியளிக்கிறது. இந்தக் கோயிலிலே நாம் காணும் ஒவ்வொரு சிற்பமும் சிவபராக்ரமத்தின் ஒரு கதையைக் கூறுவதாக உள்ளது. வேறு எந்தக் கோயிலிலும் பார்க்க முடியாத அளவிற்கு அழகிய சிற்பங்கள் கொண்ட உள் சுற்று. சிவபெருமானின் தோற்றங்களை, அவனது பராக்கிரமங்களை நாயன்மார்கள் தங்கள் பாடல்களில் போற்றிப் பாடியுள்ள அத்தனை பாடல்களுக்கும் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன, இங்குள்ள சிற்பங்கள். ஒருபுறம் சம்கார மூர்த்தங்களாகவும் மறுபுறம் அனுக்ரக மூர்த்தங்களாகவும் அமைந்துள்ளதும், இதனை வடிவமைத்த சிற்பியின் கற்பனையையும், ஆன்மிக அறிவாற்றலையும் நமக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

கருவறையையும் முகமண்டபத்தையும் சுற்றியுள்ள திருச்சுற்றிலும், வெளிச் சுவர்களிலும், பிட்சாடனர், கங்காதரர், திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், துர்க்கை, திருமால் போன்ற சிற்பங்கள் அமைந்துள்ளன. சிவதாண்டவ காட்சிகளையும் காணமுடிகிறது. தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும்.

இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தக்ஶிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுருவங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும்.

பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. இதனைச் சுற்றி வந்தால் மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். பிறப்பு முதல் இறப்பு வரை என்பது கோவிலின் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தை சுற்றிவரும் செயலாகும். மற்ற கோவில்களைப் போல் அல்லாமல சன்னதியை சுற்றி வர பாதாளம் போன்ற ஒரு அமைப்பு உள்ளது. ஒருவர் மட்டுமே நுழையக்கூடிய அளவு இடமே அதில் உள்ளது. நாம் தவழ்ந்துதான் அதிலிருந்து வெளியே வரமுடியும். இது அன்னையின் கருவறையில் இருந்து குழந்தை வருவது போன்ற செயலைக் குறிப்பதாகும். மேலும் வெளி வரும் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால், வெளியே வர அதற்கு மேலே படிக்கட்டுடன் கூடிய பெரிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது.

யானையின் உடலை உரித்து தோலை ஆடையாகப் போர்த்திய கஜாந்தகர், திகம்பரராக கபாலம் ஏந்தி நிற்கும் பிட்சைத் தேவர், உமையோடு கூடிய உமா சகிதர், அந்தி நேரத்தில், உமையமைக்கு எதிரே டமருகம், சூலம் ஏந்தி சந்தியா தாண்டவம் ஆடும் சந்தியா தாண்டவர், பைரவர் கோலத்தில் பூதகணங்களோடு, காளிக்கு எதிராக, அத்தனை முகபாவங்களையும் வெளிக்காட்டும் சண்டதாண்டவர், வீறுகொண்டு பூமியை நோக்கி வேகமாகப் பாய்ந்த கங்கையை வேணியில் தாங்கிய கங்காதரன், பதுமனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியெறிந்த பிரம்ம சிரச்சேத மூர்த்தி, ஆலகால விஷத்தை உண்டு கண்டத்திலடக்கிய விஷாபஹரணர், முப்புரம் எரித்த திரிபுராந்தகர், வாமபாகம் தந்த அர்த்தநாரி, பார்த்தனுக்கு அருளிய கிருதார்ஜுன மூர்த்தி, ஆகியவற்றை காணலாம்.

காடவர் கோமான் என்றழைக்கப்பட்ட பல்லவ மன்னன், கயிலைநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு செய்திட முடிவு செய்தான். அத்தனை ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. குடமுழுக்கான நாளும் குறித்தாகிவிட்டது. மன்னனின் கனவில் மகேசன் தோன்றினான். அரசன் குறித்த அதே நாளில் அடியார் ஒருவர் அமைத்த திருக்கோயிலுக்கு தான் எழுந்தருள வேண்டியிருப்பதால், கயிலாச நாதர் கோயில் குடமுழுக்கை வேறு நாளில் நடத்திடுமாறு கூறினார். அரசன் திருநின்றவூர் சென்றான். ஆரவாரம் ஏதுமன்றி அமைதியாக இருந்தது பூசலாரின் ஊர். ஊர்மக்கள், இங்கு ஒன்றும் கோயில் எழுப்பப்பட வில்லையே என்றனர். பூசலார் என்பவர் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து ஈசனின் திருநாமத்தை ஜபித்திருப்பதை மட்டுமே கண்டான் மன்னன். பூசலாரை நெருங்கி, மகேசன் குறிப்பிட்ட கோயில் பற்றி வினவிட, அந்த அடியார், தனது மனத்துக்குள்ளேயே அழகியதோர் கோயில் அமைத்து, அன்றைய நாள் குடமுழுக்கு செய்வதாகவும் கற்பனையில் மூழ்கியிருந்ததைக் கண்டு அதிசயித்தான். பேரரசன் நிச்சயித்த நாளில், மனக்கோயில் கட்டிய பூசலாரை வாழ்த்திட மகேசுவரன் முடிவு செய்ததன் பொருள் விளங்கியது. பூசலார் வசித்த திருத்தலத்திலும் ஓர் அழகிய திருநின்றவூர் திருக்கோயிலை நிர்மாணித்து, அதற்கு குடமுழுக்கை நிறைவேற்றிய பிறகே, காஞ்சி கைலாசநாதர் கோயில் குடமுழுக்கை முறையே நடத்தினான் பேரரசன்.

பிரதான கோயிலைச் சுற்றிப் பல சிறு துணைக் கோயில்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. வாயிலில் அமைந்துள்ள கோயில் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி ரங்கபதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். சுற்றியுள்ள 58 சிறு கோயில்களில் ஒரு புறம் சிவனின் சம்கார மூர்த்திகளையும், மற்றொரு புறம் அனுக்கிரக மூர்த்திகளையும் காணமுடியும். இக்கோயிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோயில் உள்ளது. மகேந்திரவர்மேச்வரகிரகம் என்றழைக்கப்படுகிறது. 

மகாசிவராத்திரி இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலை 8.30 மணி முதல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : சென்னை 

அருகிலுள்ள ரயில் நிலையம் : காஞ்சிபுரம்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×