திருப்பட்டூர்





	


	



























	




 




	








 




7:02:43 AM         Thursday, February 25, 2021

திருப்பட்டூர்

திருப்பட்டூர்
திருப்பட்டூர் திருப்பட்டூர் திருப்பட்டூர் திருப்பட்டூர்
Product Code: திருப்பட்டூர்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                            திருப்பட்டூர்,  பிரம்மபுரீஸ்வரர்

திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சி சென்னை நெடுஞ்சாலையில், சமய புரத்தில் இருந்து 15 கி.மீ தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. 

இறைவன் : பிரம்மபுரீஸ்வரர்

இறைவி  :  பிரம்ம நாயகி

தல தீர்த்தம் : பிரம்ம தீர்த்தம்

தல விருட்சம் : மகிழ மரம்

தல சிறப்புகள் : பங்குனி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சூரியன், தன் கதிர்களால் சிவபெருமானை வழிபடும் காட்சி அற்புதமானது. அந்த நாட்களில் காலை ஆறு மணிக்கு  இந்த அற்புதக் காட்சியை கண்டு ரசிக்கலாம். சூரியன் ஈசனை வழிபடும் தினத்தில் இங்கு வந்து, பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மனையும் வழிபட்டால் கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். பிரம்மபுரீஸ்வரர் கோவில் ஒருவரது தலைஎழுத்தை மாற்றும் கோவில் என்று சொல்லப்படுகிறது.  மேலும் தலையில் எழுதியிருந்தால் மட்டுமே ஒருவர் இந்த கோவிலுக்கு  செல்ல முடியும் என்று நம்பபடுகிறது.   பிரம்மபுரீஸ்வரர் ஒரு சுயம்பு மூர்த்தி.  கிழக்கு நோக்கிய மூலவர் போலவே வெளி பிரகாரத்தில்  தெற்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி பிரம்மன் சன்னதி உள்ளது.  திருபட்டூரில் மட்டுமே பிரம்மன்  தனி சன்னதியுடன் காணபடுகிறார். இக்கோவிலில் எழுந்தருளி  பாலிக்கும் பிரம்மாவின் உயரம் 6 .1/4 அடி.  

தல வரலாறு : இத்தலத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால் ஏற்பட்ட அதிர்வலைகள் அனைத்து இடங்களிலும் பரவிக் கிடந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர் பெற்றது. அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ ஆனது. புலியின் கால்களைப் பெற்றிருந்தவர் ‘வியாக்ர பாதர்’. இவர் சிவபெருமானை நோக்கி தவம் செய்ய தேர்வு செய்த திருத்தலம்.

இத்தலத்தில் உள்ள தீர்த்தக் குளத்து நீரை, எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கயிலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமன் நாராயணரை வணங்கி தொழுததால், ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார். திருக்கயிலாய ஞான உலா என்னும் நூல் அரங்கேறிய இந்தத் தலத்தில், கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், பின் அவர்களே இறைவனாக மாறிப்போவதும் நிகழும் என்பது ஐதீகம்.

சிவபெருமான், பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்டது திருப்பட்டூர் என்ற இந்த திருத்தலத்தில் தான். பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளமும், சிவலிங்கச் சன்னிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12 சிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். பிரம்ம சம்பத் கவுரி என்ற திருநாமத்துடன் அம்பாள், கனிவு ததும்ப.. கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் புடவை சாத்தி வேண்டிக் கொண்டால் தடைபட்ட திருமணம் இனிதே நடைபெறும். பாதாள ஈஸ்வரர், சுத்த ரத்தினேஸ்வரர், தாயுமானவர், கயிலாசநாதர், திருவானைக்கா ஜம்புகேஸ்வரர், லால்குடி சப்தரிஷிஸ்வரர், திருஅண்ணாமலையார், பழமலைநாதர், பிரம்ம புரீஸ்வரர், காளத்திநாதர், ஏகாம்பரரேஸ்வரர், மண்டூகநாதர் ஆகிய சிறப்பான சிவத்தலங் களின் லிங்கங்களே பிரம்மாவால் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆதிகோவிலாக அறியப்படும் கயிலாசநாதர் சன்னிதியில் நம்பிக்கையான வழிபாடுகள் அதற்குரிய பலனைத் தரும்.

கோவில் அமைப்பு : கயிலாசநாதர் கோவில் புகழ்பெற்ற பல்லவர் காலக் கட்டுமானச் சிறப்பை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளதைக் காணலாம். ஏழு அல்லது எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இதன் தேர் வடிவிலான கோவில் அமைப்பும், எந்நேரமும் மேலிருந்து விழும் அபிஷேகத்தில் குளிர்ந்தவராக அருளும் பதினாறு பட்டைகள் கொண்ட தாராலிங்கமாக இங்கே ஈசன் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தை ‘சந்திரகலா லிங்கம்’ என்கின்றனர். இந்த சன்னிதிக்கு எதிரில் உள்ள நந்தி, நிஜ உருவத்தைப் போன்று அமைந்து வியக்க வைக்கிறது. ஈஸ்வரருக்கு 64 மூர்த்தங்கள் உண்டு. அதில் தத்புருஷ மூர்த்தங்கள் 25 வகை என்கின்றன சைவ நூல்கள். அவற்றுள் காலபைரவரும் ஒருவர். நம் பாவபுண்ணியக் கணக்குகளை கணித்து நமக்கு நன்மைகளை வழங்குவதில் காலபைரவர் நிகரற்றவர். பொதுவாக வடகிழக்கு மூலையில் தெற்கு திசையை நோக்கியபடி உள்ள காலபைரவரையே தரிசித்திருப்போம். ஆனால் திருப்பட்டூர் தலத்தில் மேற்கு நோக்கியபடி இருக்கிறார் கால பைரவர். இவரின் வலது செவியும் அதில் இருக்கும் தாடங்கமும் மற்ற தலங்களில் உள்ளதுபோல் இல்லாமல் வித்தியாசமாக இருப்பதும் கூடுதல் சிறப்பு. 

இத்தலத்தில் உள்ள ஐந்து நிலை ராஜகோபுரத்தில் நுழைந்து, ஐந்தெழுத்து நாயகனான சிவனாரை தரிசித்தால் வாழ்வின் ஐந்து நிலைகளிலும் நம்மைக் காத்து ரட்சிப்பார் இத்தல இறைவன். அதே போல் கோபுர வாசலில் இருந்து ஏழு நிலைகளை கடந்துதான் இறைவனை தரிசிக்க முடியும். சூரிய பகவானே தன் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன், ஏழு நிலைகளைக் கடந்தே சிவனாரை தரிசிக்கிறார் என்பது ஐதீகம். ஆகவே இங்கு வந்து தரிசிப்பவர்களின் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தீரும் என்கிறார்கள். பிரம்மன் வழிபட்ட சோடச லிங்கம் பதினாறு பட்டை  தனி மண்டபத்தில் உள்ளது. இந்த மண்டபத்தின் உச்சி மரத்தால் ஆனது.பதஞ்சலி மகரிஷி ராமேஸ்வரம் உட்பட 10 தலங்களில் ஐக்கியமானதாக சொல்லப்படுகிறது. அதில் இத்தலமும் ஒன்று. இவர் ஐக்கியமான இடத்தில் ஒரு லிங்கமும், ஓவியமும் உள்ளது. அமாவாசையன்று இந்த லிங்கத்திற்கு, தயிர் சாதம் படைத்து பூஜை நடக்கும். வேதங்களை ஈசன் அம்பிகையிடமும், அம்பிகை பிரம்மாவிடமும், பிரம்மா நந்தியிடமும், நந்தி தேவர் ரிஷிகளிடமும் சொன்னதாக காஞ்சிப்பெரியவர் சொல்வார். ஏனெனில் இங்கு பிரம்மபுரீஸ்வரர், பிரம்ம நாயகி, பிரம்மா, பிரம்மாண்ட நந்தி, பதஞ்சலி ரிஷி ஆகியோர் உள்ளனர். இவ்வகையில் இது மிக விசேஷமான கோயில். 

இந்த ஆலயத்தில் 36 தீபங்களை ஏற்றி வழிபடுவது சிறப்பான பலன் களைத் தரும் என்பது நம்பிக்கை. நம்மை ஆட்சி செய்யும் 27 நட்சத்திரங்கள் மற்றும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கும் வகையில் 36 தீபங்களை ஏற்றி, ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வந்து பிரார்த்தனை செய்யும்போது, நமது துன்பங்கள் அனைத்தும் விலகும். கிரக தோஷங்கள் நீங்கும் என் கிறார்கள். ஒவ்வொருவரின் ஜென்ம நட்சத்திர நாளிலும் இங்கு வந்து இந்தப் பிரார்த்தனையைச் செய்வது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். இந்த ஆலயத்தின் சிறப்புகளில் ஒன்று பிரதோஷ வேளை. இத்தலத்தில் பிரதோஷ நாளில் நந்தியம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறும் போது, அங்கிருந்தபடி ஒரு துணில் இருக்கும் நரசிம்மரையும் தரிசிக்க முடியும். ஒரு பிரதோஷ நாளில்தான் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்யகசிபுவை வதம் செய்தார். ஆகவே பிரதோஷ நேரத்தில் நந்தியோடு, நரசிம்மரையும் வழிபட்டால் நம் இன்னல்கள் யாவும் தீரும் என்பது நம்பிக்கை.

இங்குள்ள சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சாத்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும்.தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம் நிச்சயம் கிடைக்கும்.தேய்பிறை அஷ்டமியில், ராகு கால வேளையில் இங்குள்ள காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச் சொல்லி வணங்க வேண்டும். அதற்காகத் தான் இந்த காலபைரவரின் வலது காது வித்தியாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் வீற்றிருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வரியம் கிடைக்கும். 

திருப்பட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள், இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி விட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம் கொழிக்கும் என்கிறார்கள். இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சன்னிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர். வெள்ளைத் தாமரை சாத்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும். 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் இத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் சேரும்.

சில குழந்தைகள் இரவு வேளையில் தூங்காமல், தொடர்ந்து அழுது கொண்டிருக்கும். இவ்வாறு குழந்தைகள் அழாமல் இருக்கவும், அவர்கள் நிம்மதியாக தூங்கவும் இங்குள்ள கால பைரவரை வழிபடுகின்றனர். அர்த்த ஜாமத்தில் இவரது சன்னதியில் சாவி வைத்து பூஜை நடக்கும். இவ்வேளையில் தரப்படும் விபூதியைப் பெற்றுச் சென்று குழந்தைக்கு கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைக்கு பைரவர் காவலாக இருப்பார் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில் ஒருவரது ஏழாம் இடத்தைப் பொறுத்தே மனைவி, நண்பர்கள் அமைவர். இது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இங்கு வழிபடுகின்றனர். திருமணத்தடை, பிரிந்த தம்பதிகள் சேருதல், தொழில், வியாபார, பணி விருத்திக்காக பிரம்மனிடம் வேண்டலாம். மிக முக்கியமான பிரார்த்தனை புத்திரப்பேறு ஏனெனில், பிரம்மன் தானே படைத்தாக வேண்டும். அவ்வகையில் இது மிகச்சிறந்த புத்திரப்பேறுக்கான பிரார்த்தனை தலம்.  வைகாசி சதயத்தன்று இவரது குருபூஜை நடக்கிறது. சித்தர்பாடலில் இத்தலம் பதஞ்சலி பிடவூர் எனக் கூறப்பட்டுள்ளது. மனஅமைதி கிடைக்க, எலும்பு தொடர்பான நோய் நீங்க, கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெற, குருவருள் கிடைக்க திங்கள், வியாழக் கிழமைகளில் இவரை வழிபடுகின்றனர்.

காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல்  இரவு 8.00 மணி வரை.  பிரதி வியாழன் அன்று பிற்பகல் 1.00 மணி வரை நடை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி

அருகிலுள்ள  நிலையம்   :  திருச்சிராப்பள்ளி

பேருந்து  வசதி   : உண்டு

தங்கும் வசதி   :  இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×