நடப்பூர், நடனபுரீஸ்வரர்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் நடப்பூர் என்னும் ஊரில் அமைந்துள்ளது.
இறைவி : நடனபுரீஸ்வரி
தல விருட்சம் : அரசு, வில்வம்
தல தீர்த்தம் : லட்சுமி தீர்த்தம்
கோவில் அமைப்பு : இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் எதிரில் தலவிருட்சம் மற்றும் தீர்த்தம் அமைந்துள்ளது. உத்திராட்சப் பந்தலின் கீழ் மூலவர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் அம்பாள், சொறிப்பிள்ளையார், சண்டிகேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, பைரவர், அரசமரத்து விநாயகர், சூரியன், நவக்கிரகங்கள், நாகலிங்க மரத்தின் அருகில் நாகர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். பலிபீடம், அதிகார நந்தி இடப்பக்கம் தலை சாய்த்த வண்ணம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் இடப்பக்கம் விநாயகரும் வலப்பக்கம் தண்டாயுதபாணியும் அருள்பாலிக்கிறார்கள். அருகே பிரதோஷ நந்தியும் அமைந்துள்ளது.
திருவாரூர் தியாகராஜர் உமையாளுடன், தர்மங்களும், சாஸ்திரங்களும் இவ்வுலகில் சிறந்து விளங்க இந்திரன் முதலான தேவர்களுடன் திருமாகாளம் என்ற இடத்திற்கு சோமாசி நாயன் மார்க்கு அருள்புரிய, சோமயாகத்திற்கு செல்லும் பொருட்டு புலவன், புலர்த்தியர் வேடம் பூண்டு இந்த ஊரில் நடனமாடி, இங்கிருந்து நடந்தே சென்றதால் நடப்பூர் என வந்துள்ளது. இந்த தகவல் அறிந்த சோழ மன்னன் சிவனுக்கு கோயில் கட்டினான்.
தல வரலாறு : சோழன் ஆட்சியில் கட்டிய 108 கோயில்களில் இக்கோயிலும் ஒன்று. இக்கோயில் பக்தி இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளது. காலப்போக்கில் பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து. பின் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெகத்குரு ஜெயயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த 2008 ம் ஆண்டு நேரில் வருகை தந்து இறைவனை வணங்கினார்.அதன் பின் அப்பகுதியைச் சேர்ந்த கலியபெருமாளை அழைத்து, தன் கழுத்தில் இருந்த பட்டாடையை அணிவித்து கோயில் கட்ட அருளாசி வழங்கியுள்ளார். ரூ.35 லட்சம் செலவில் புதிதாக கோயில் கட்டி பிற விக்ரஹங்கள் பிரதிஷ்ட்டை செய்து 2013 செப்டம்பர் மாதம் கோயில் கும்பாபிஷேகம் நடத்தியுள்ளனர். இங்கிருந்த மற்றும் பூமிக்கடியில் கிடைத்த ஐம்பொன்னாலான 14 விக்கரஹங்கள் அரசு பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
பிரதோஷம், பவுர்ணமி, சிவராத்திரி, அமாவாசை, ஆருத்ரா தரிசனம், மாசிமகம், தமிழ் வருடப்பிறப்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிடைக்கவும், நாகதோஷம் நீங்கவும், தீராத நோய்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள். இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சார்த்தியும், சொறிப்பிள்ளையார், நாகர் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
காலை 8.00 மணி முதல் பகல் 11.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : திருச்சிராப்பள்ளி
அருகிலுள்ள நிலையம் : திருவாரூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை