சேவூர், வாலீஸ்வரர்
திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்தின் அவினாசிக்கு வடக்கே 5 மைல் தொலைவில் உள்ளது.
இறைவன் : வாலீஸ்வரர்
இறைவி : அறம் வளர்த்த நாயகி
தல தீர்த்தம் : வாலி தீர்த்தம்
தல விருட்சம் : வில்வம்
தல சிறப்புகள் : முருகன் பொதுவாக சேவற்கொடியினை இங்கு கையில் ஏந்தி சிம்ம பீடத்தில் இருப்பது சிறப்பாகும்.
கோவில் அமைப்பு : ஆலயம் ஒரு 5 நிலை கோபுரத்துடன் சுற்றிலும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. இவ்வாலயம் முற்றிலும் கற்றளியால் ஆனது. ஆலயத்திற்கு வெளியே கோபுரத்திற்கு எதிரே கொங்கு நாட்டுத் தலங்களுக்கே உரித்தான கருங்கல் விளக்குத்தூண் உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் விசாலமான இடத்தில் மூலவர் வாலீஸ்வரர், முருகர் மற்றும் அம்பாள் அறம்வளர்த்தநாயகி சந்நிதிகள் கிழக்கு நோக்கி உள்ளன. முருகர் சந்நிதி நடுவிலிருக்க இறைவன் மற்றும் இறைவி சந்நிதிகள் அதன் இருபுறமும் சோமஸ்கந்த அமைப்பில் இருப்பதைக் காணலாம். இறைவன் மற்றும் இறைவி இருவர் சந்நிதிகளுக்கும் தனிதனியே பலிபீடம் மற்றும் நந்தி இருக்கின்றன. முருகர் சந்நிதிக்கு எதிரே பலிபீடம் மற்றும் மயில் உள்ளது. மூன்று சந்நிதிகளுக்கும் சேர்த்து முன் மண்டபம் அமைந்துள்ளது. முன் மண்டபத்தின் தெற்குப் பக்கம் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. நடராஜர் உருவம் தொன்மையும், அழகும் வாய்ந்தது. சனீஸ்ரனுக்கும் தனி சந்நிதி இவ்வாலயத்தில் உள்ளது. கொங்குதாட்டுத் தலங்கள் எல்லாவற்றிலும் சனி பகவானுக்கு தனி சந்நிதி இருப்பது குறிப்பிடத்தக்கது.
அம்பாள் அறம் வளர்த்த நாயகி கையில் தாமரை மலர் ஏந்தி நின்ற கோலத்தில் அருட்காட்சி தருகிறாள். இத்தலத்தில் அம்பாள் சந்நிதியில் மாங்கல்ய பூஜை ஆண்டு தோறும் மிக சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. இத்தல இறைவனை இராமாயண காலத்து வாலி பிரதிஷ்டை செய்து பூஜை செய்ததாக தல வரலாறு குறிப்பிடுகிறது. இங்கு புலியொன்று பசுவின் மீதேறி விளையாடிய காட்சியைக்கண்ட வாலி அவ்விடத்தில் சிவபூஜை செய்ததால் இங்குள்ள சிவபெருமானுக்கு வாலீஸ்வரர் என்றும் தீர்த்தம் வாலி தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. இதற்குச் சான்றாக கருங்கல் விளக்குத் தூணின் அடிப்பகுதியில் வாலி இறைவனை வழிபடுவது போன்ற சிற்பம் உள்ளதைப் பார்க்கலாம். இறைவனுக்கு கபாலீஸ்வரர் என்று பெயரும் உள்ளது. கல்வேட்டுக்களில் இக்கோவில் கபாலீச்சுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் பட்டையும் இலையையும் வீட்டில் வைத்தல் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.
இக்கோயிலில் வாலீஸ்வரர் சுவாமி, வெங்கட்ரமணசுவாமி, அறம்வளர்த்த நாயகி அம்மன் சன்னதிகளும், சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, விநாயகர், பாலதண்டபாணி, சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், காலபைரவர், சூரியன், சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது.
தல வரலாறு : சேவூரில் கரிகால சோழன் உறையூரை தலைநகரகாக கொண்டு ஆண்டு வந்த சோழ மன்னனனுக்க சிங்களாதேவி, சியாமளாதேவி என்ற இரு தேவிமார்கள் இருந்தார்கள், ஒரு சமயம் உறையூர் பாண்டிய மன்னனின் தாக்குதலுக்கு உள்ளான போது மண் மாரியால் உறையூர் அழிக்கப்பட்டது. அப்பொழுது இருதேவிமார்களையும் சந்திர பட்டர், ராம பட்டர் என்று இருபிராமணர்கள் காப்பாற்றி கொங்கு நாடு அழைத்து செல்வார்கள். அப்பொழுது சிங்களாதேவி கர்ப்பமாக இருப்பார். கொங்கு நாட்டில் வைத்து இருவரும் பாதுகாக்க படுவார்கள்.
அப்பொழுது சிங்களா தேவிக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறக்கும். அந்த ஆண் குழந்தை பதினாங்கு வருடங்கள் அங்கேயே வளர்ந்து போர் கலைகளை அனைத்தையும் கற்று தேர்ந்து மீண்டும் தனது ராஜ்ஜியத்தை கைப்பற்றவேண்டி பாண்டியன் மீது போர் தொடுக்கிறான். ஆனால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனால் சோழதேசத்தை கைப்பற்ற இயலவே இல்லை. அதுசமயம் தன்னை காப்பாற்றிய சந்திர பட்டர், மற்றும் ராம பட்டரிடம் வந்து உபதேசம் கேட்கிறான்.
வாலி என்பவன் சிறந்த சிவபக்தன் அவனின் எதிரில் யார் வந்தாலும் அவர்களின் பாதி பலம் வாலிக்கு வந்துவிட வேண்டும் என்று வரம் பெற்றவன். அதனால் அவனை யாராலும் வெல்ல முடியாமல் இருந்தது. அவ்வளவு பெரிய பலசாலியான வாலியே சூழ்ச்சியால் தான் இழந்த கிஸ்கிந்தா நாட்டை மீண்டும் கைப்பற்ற வேண்டி வசிஷ்டரிடம் உபதேசம் பெற்று அவினாசிக்கு வடக்கே சேவூர் என்னும் இடத்தில் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட பிறகே தனது ராஜ்ஜியத்தை மீண்டும் பெறுகிறான். இதனை அறிந்த ராமபிரான் கூட வாலியை நேருக்கு நேராக நின்று எதிர்க்க முடியாமல் மறைதிருந்தே அம்பெய்தி அவனை கொல்லுவார். இதனால் ராமரால் கூட எதிர்க்க முடியாத மிக பெரிய பலசாலியான வாலியினால் பிரதிஷ்ட்டை செய்யப்பட்ட சிவாலயமான சேவூர் சிவாலயத்தில் ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று ஹோமம் செய்து காரம் பசுவை கோவிலுக்கு தானமாக கொடுக்குமாறு உபதேசம் செய்தனர். அவர்களின் உபதேசம் பெற்ற சோழ இளவரசன் பெளர்ணமி அன்று சேவூர் வாலீஸ்வரர் கோவிலில் ஹோமம் செய்து கோவிலுக்கு காரம்பசுவை தானமாக வழங்கினான்.
அதன்பிறகு மீண்டும் உறையூர் மீது படையெடுத்து உறையூரை கைப்பற்றி கரிகால சோழன் என்று பட்டமெய்தி சோழ தேசத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். அத்துடன் தனது ராஜ்ஜியம் திரும்ப கிடைக்க காரணமாக இருந்த சேவூர் வாலீஸ்வரர் கோவிலை பெரியதாக கட்டி அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு தனி சன்னதியும் அமைத்து கொடுத்துள்ளான். அத்துடன் தனது ராஜ்ஜியத்தை திரும்ப பெற உதவியாக இருந்த சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு சிங்களாதேவியின் நினைவாக சிங்காநல்லூர் என்றும் ஊரையும், சியாமள தேவி நினைவாக சியாமளபுரம் என்ற ஊரையும் உருவாக்கி முறையே சந்திர பட்டர் மற்றும் ராம பட்டருக்கு தானமாக வழங்கினான்.
கி.பி 15-ம் நூற்றாண்டில் மராட்டியர்களால் ஆறை நாட்டு மக்களிடம் கத்தி முனையில் கொள்ளையடிக்கப்பட்டது. மராட்டியர்கள் நாட்டினுள் நுழையாமல் தடுத்து சத்தியமங்கலம் அருகே உள்ள அரசூரில் போர் நடைபெற்றது. இப்போரில் ஆறை நாட்டு இளவரசன் சேனாதிபதி சோழியாண்டார் வீரமரணம் அடைந்தார். அதன் பிறகு மராட்டியர்கள் வாலீஸ்வரர் கோவிலில் பாதுகாத்து வைக்கப்பட்ட அனைத்து செல்வங்களையும் கொள்ளையடித்தனர். அவர்களை எதிர்த்து போரிட்டு விக்ரம சோழியாண்டாரும் திருக்கோவிலின் முன்பு வீர மரணம் அடைந்தார், அப்பொழுது ஆறை நாடு முழுவதும் சூறையாடப்பட்டது. விக்ரம சோழியாண்டார் வீரமரணம் அடைந்த இடத்தில் அவர் நினைவாக ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது, அந்த லிங்கம் தனியார் நில பகுதிக்குள் இருந்த காரணத்தால் 2004 ஆம் ஆண்டு நடந்த குடமுழக்கின் பொழுது அந்த லிங்கம் அரச மரத்து விநாயகர் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்பொழுதும் அந்த லிங்கத்தை காணலாம். நமது கோவிலின் ஐம் பொன் நடராஜர் சிலை மட்டும் காப்பாற்றும் பொருட்டு சிலையை திருகோவிலின் கிணற்றில் போடப்பட்டது. கிணற்றில் போட்ட சிலையின் பிரபாவலையம் உடைந்து அது திரும்பவும் ஒட்ட வைக்கப்பட்டதையும் இப்பொழுதும் காணலாம். படைவீரர்கள் அனைவரும் நமது கோவிலை சுற்றியே கவனம் செலுத்தியதால் அவினாசி கோவில் நடராஜர் சிலை மராட்டியர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து திப்பு சுல்தானால் சேவூர் கோட்டை முழுவதும் அழிக்கப்பட்டது.
அரசியலில் புதியதாக பதவி பெற நினைப்பவர்களும், இழந்து அரச பதவிகளை பெற விரும்புபவர்களும் சேவூர் சென்று சேவூர் வாழ் இறைவனை பூஜித்தால் அவர்கள் விரும்பிய அரச பதவி கிட்டும் என்பது உறுதி. இந்த செய்தி சோழன் பூர்வ பட்டையத்திலும் சேவூர் புராணத்திலும் இடம்பெற்றுள்ளது.
காலை 6.00 முதல் பகல் 12.00 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர்
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : இல்லை
உணவு வசதி : இல்லை