அபிஷேகபுரம்

	


		
 
	
 
1:42:03 PM         Friday, May 14, 2021

அபிஷேகபுரம்

அபிஷேகபுரம்
அபிஷேகபுரம் அபிஷேகபுரம் அபிஷேகபுரம் அபிஷேகபுரம் அபிஷேகபுரம் அபிஷேகபுரம்
Product Code: அபிஷேகபுரம்
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

                                                                                         அபிசேகபுரம், ஐராவதீஸ்வரர்

திருத்தல அமைவிடம்: இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின்  திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூரிலிருந்து நம்பியூர் செல்லும் வழியில் அபிஷேகபுரம் உள்ளது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதும் உள்ளது. பெருமாநல்லூரிலிருந்து ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.

இறைவன் :   ஐராவதீஸ்வரர்

இறைவி :  அபிஷேகவல்லி 

தல விருட்சம் :  வில்வ மரம், மகிழ மரம் 

தல சிறப்புகள் :  ஈசன் சுயம்பு லிங்கமாய் எழுந்தருளி, ஐராவதீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டு பக்தர்களுக்கு பாவ விமோசனம் அளிக்கும் தலம். ஒரே வளாகத்தில் கோயில்கள் இருப்பினும் ஐராவதீஸ்வரருக்கும், அழகுராஜப் பெருமாளுக்கும் தனித்தனியே துவஜஸ்தம்பம் அமைக்கப் பட்டுள்ளது. கோயிலின் வளாகத்தில் மிகப்பெரிய ஆலயமணி தனி மண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது.  திங்கட்கிழமை ஐராவதீஸ்வரருக்கு, செவ்வாய் கல்யாண சுப்பிரமணியருக்கு, புதன் அழகுராஜப் பெருமாளுக்கு, வியாழன் தட்சிணாமூர்த்திக்கு, வெள்ளி அபிஷேகவல்லிக்கு, சனி சனீஸ்வரருக்கு, ஞாயிறு சூரியனுக்கு என வாரத்தின் ஏழு நாட்களும் சிறப்பாக விசேஷ பூஜைகள் இந்த தெய்வங்களுக்கு நடைபெறுகின்றன.

தல வரலாறு : சொர்க்கலோகத்தில் இந்திரனுக்கு வாகனமான வெள்ளை யானையின் பெயர் ஐராவதம். ஒருமுறை துர்வாச முனிவர் புனித நதி பாயும் ஊரான காசியில் சிவலிங்கம் ஸ்தாபித்து வழிபாடு செய்தார். பின்னர் இறைவனுக்கு பூஜையில் வைத்த தாமரை மலரில் ஒன்றை எடுத்துவந்து, வெள்ளை யானை மீது அமர்ந்து பவனி வந்த இந்திரனிடம் கொடுத்தார். மலரை பெற்ற இந்திரன் அதனை அலட்சியமாக யானைமீது வைத்தான். யானையோ, தனக்கு உறுத்தலாக இருந்த அம்மலரை தன் துதிக்கையால் கீழே தள்ளி காலால் மிதித்து தேய்த்தது. கோபக்கார முனிவரான துர்வாசர் அந்த யானையை காட்டு யானையாக மாற சாபமிட்டார். அத்தருணத்தில் இருந்து வெள்ளை யானை காட்டு யானையாக நிறம் மாறியது.

பின்னர் தன் செயலுக்கு வருந்தி மீண்டும் பழைய நிறத்திற்கு மாற சாப விமோசனம் கேட்டது. பூலோகத்தில் உள்ள சுயம்பு லிங்கங்களை தரிசித்தால் சாப விமோசனம் கிட்டும் என நிவர்த்தி சொன்னார். அப்படி ஐராவதம் காட்டு யானையாக வழிபட்ட சுயம்பு லிங்கத் தலங்களுள் அபிஷேகபுரமும் ஒன்று. ஐராவதம் வழிபட்டு சாபம் நீங்கியதால் இறைவனின் திருநாமம் ஐராவதீஸ்வரர் என வழங்கலாயிற்று. இத்தலம் பதிமூன்றாம் நூற்றாண்டில் வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டுள்ளது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.

கோவில் அமைப்பு : பல திருப்பணிகளைக் கண்டு ஆலயம் இப்போது மேலும் விரிவடைந்துள்ளது. கிழக்கு நோக்கிய ஆலயத்தின் கருவறையில் இறைவன் ஐராவதீஸ்வரர், தம்மிடம் வேண்டிடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, சகல ஐஸ்வரியத்தை அளித்து அருள் புரிகிறார். மகாமண்டபத்தில் விநாயகர், தண்டாயுதபாணி இருவரும் தனித்தனி சந்நதி கொண்டுள்ளனர். அதிகார நந்தி, பலிபீடம் என்று கிரமப்படி அமைந்துள்ளன. வசந்த மண்டபத்தில் மிகப்பெரிய பிரதோஷ நந்தி, பலிபீடம் அமைந்துள்ளன. இந்த பிரதோஷ நந்தி தனது வலது கண்ணால் இறைவனை காணும் விதமாக வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது.

இதே மண்டபத்தில் துவாரபாலர்கள் கம்பீரமாக உள்ளனர். சூரியன், சந்திரன் மற்றும் நால்வருடன் சேக்கிழாரும் காட்சி தருகின்றார். கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, சிவதுர்க்கை ஆகியோர் அருள்பாலிக்க, சண்டிகேஸ்வரர் தனிச் சந்நதியில் வீற்றிருக்கின்றார். நவநாயகர்கள், காலபைரவர், சனீஸ்வரர் ஆகியோருக்கு தனித்தனி சந்நதிகள் அற்புதமாக அமைந்துள்ளன. இறைவன் சந்நதிக்கு தெற்கு பகுதியில் இறைவி அபிஷேகவல்லி தனிச் சந்நதியில் அருளாட்சி புரிகிறாள். கருவறையில் அம்பிகை அழகு நிறைந்தவளாய், கருணை பொழியும் கண்களுடன் காட்சி தருகிறாள். இவள் சந்நதி அமைந்திருக்கும் மகாமண்டபத்தில் துவார சக்திகள், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. கோஷ்டத்தில் வராஹி, சாமுண்டி, மகேஸ்வரி அருள்கின்றனர். இறைவி சந்நதிக்கு தெற்குப் பகுதியில் விநாயகர் அருள்பாலிக்கிறார். 

இவருக்கு அடுத்து ஸ்ரீதேவி பூதேவி சமேத அழகுராஜப்  பெருமாள் பக்தர்களின் வாழ்வில் அற்புதம் நிகழ்த்திடும் வண்ணம் சேவை சாதிக்கிறார். இவரின் சந்நதி இடம்பெற்றுள்ள அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர் குடிகொண்டுள்ளார். மகா மண்டபத்தில் ஜெயன், விஜயன் மற்றும் கருடாழ்வார், பக்த ஆஞ்சநேயர் ஆகியோரின் அருட்காட்சி கிடைக்கின்றது. கோஷ்டத்தில் நரசிம்ம அவதார மூர்த்தி, மச்சாவதார மூர்த்தி, கூர்மவதார மூர்த்தி ஆகியோர் எழில் கோலம் காட்டுகின்றனர். கோயிலின் மேற்குப் பகுதியில் சப்த மாதாக்கள் தரிசனம் அருள்கின்றனர். வள்ளி தெய்வானை சமேத கல்யாண சுப்பிரமணியர் சந்நதி இறைவன் கருவறைக்கு வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. பெருமாள் அம்பாளை சிவபெருமானுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதுப் போல் இந்த ஆலயத்தின் அமைப்பு உள்ளதாக ஆன்மிகப் பெரியோர்கள் சொல்கின்றனர்.

இக்கோயிலில்  கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. தோஷங்கள் நீங்க வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்கு மேலும், செவ்வாய் மாலை மூன்று மணிக்கு மேலும் சிவதுர்க்கைக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. உறவுப் பெண்களின் தீய எண்ணங்களால் திருமணத் தடைக்கு ஆளாகும் இளம்பெண்கள், இவ்வாலயத்தில் உள்ள வராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி நாளில் விரலி மஞ்சள் மாலை சாற்றி, அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டால் திருமணத் தடை நீங்குவதாக ஐதீகம். இறைவனுக்கு பாலபிஷேக பூஜை செய்து, இரண்டு சொம்புகளில் அபிஷேக தீர்த்தத்தை வைத்து சிறப்பு பூஜை முடிக்கிறார்கள். அதாவது, சாபங்களால் பிரிந்த இரண்டு தரப்பும் மாறி, மாறி மூன்று முறை  தீர்த்தத்தை ஒருவர் மற்றொருவருக்கு அளித்து அருந்திய பின்னர், குத்த தட்சணையை வெற்றிலை, பாக்கில் வைத்து அர்ச்சகரிடம் அளித்து பூஜை செய்தால் உறவுகள் ஒன்றாகி ஒற்றுமையுடன் செல்லலாம்.

இத்தல இறைவன் பாவ விமோசனம் அளித்து குடும்ப உறவுகள் மேம்பட ஆசிர்வதிப்பார் என்று இங்கு வந்து பலன் பெற்றவர்கள் இறை மகிமையுணர்ந்து  கூறுகின்றனர். இத்தலத்தில் உள்ள ஒவ்வொரு தெய்வத்திற்குரிய முக்கிய விரத தினங்களில், அந்தந்த தெய்வங்களுக்கு விசேஷ அபிஷேகம் மற்றும் அலங்காரங்களுடன் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. ஒவ்வொரு பிரதோஷமும் வெகுவிமரிசையாக அனுஷ்டிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரி, ஆனித் திருமஞ்சனம், கார்த்திகை சோமவாரம், ஐப்பசி அன்னாபிஷேகம், மாசிமகம், ஆடிப்பூரம் போன்ற வருடாந்திர விசேஷங்கள் பெருவிழா போல் நடத்தப்படுகின்றன.

காலை 7.00 முதல் பகல் 12.00 மணி, மாலை 4.30 முதல் இரவு 7.00 மணி வரை திறந்திருக்கும்.

அருகிலுள்ள விமானதளம் : கோயம்புத்தூர் 

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருப்பூர்

பேருந்து வசதி : உண்டு

தங்கும் வசதி : இல்லை

உணவு வசதி : இல்லை

Mail this page Printable view
×
×
×
×
×
×
×