நர்மதை





	


	



























	




 




	








 




12:46:46 PM         Friday, May 14, 2021

நர்மதை

நர்மதை
நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை நர்மதை
Product Code: நர்மதை
Availability: In Stock
Price: $0.00
Qty:     - OR -   Add to Wish List
Add to Compare

பிறப்பிடம்: இந்தியாவில் மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கிடையில் பாய்ந்து நர்மதா மாவட்டம் வழியாக அரபிக் கடலில் கலக்கின்றது. மேற்கு நோக்கி ஓடும் ஆறுகளில் இது பெரியது ஆகும். கோதாவரி மற்றும்கிருஷ்ணா நதிகளை அடுத்து நருமதை ஆறே இந்தியாவின் மிக நீளமான நதிகளுள் மூன்றாவது இடத்தைப்பெறுகிறது. ஐந்தாவது புண்ணிய நதியாக விளங்குவது நர்மதை நதியாகும். இது ஏறத்தாழ 1290 கி.மீ நீளமானது.

சிறப்பு : கங்கை, கோதாவரி, கிருஷ்ணாவிற்கு அடுத்தபடியாக நான்காவது நீளமான நதி இதுவே ஆகும். இது மத்திய இந்தியாவின் "ஜீவ நதி' என்று அழைக்கப்படுகிறது. இந்திய வரைபடத்தில் இந்நதியானது வடஇந்தியாவையும், தென்னிந்தியாவையும் பிரிக்கும் ஒரு கோடு போல் இருப்பதைக் காணலாம். இந்நதியின் மற்றொரு சிறப்பு யாதெனில் இது கிழக்கே தோன்றி 1312 கி.மீ. பயணம் செய்து மேற்கே அரபிக் கடலில் சென்று கலக்கிறது. நர்மதை, தபதி, மற்றும் மஹி ஆகிய மூன்று ஆறுகளும் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கிப் பாய்கின்றன. மற்ற ஆறுகள் யாவும் மேற்கில் தோன்றி கிழக்கில் கலக்கின்றன. விந்திய சாத்பூரா மலைத் தொடர்களுக்கு நடுவே உள்ள பள்ளத்தாக்கில் இந்நதி பாய்கிறது. இந்நதியானது மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், குஜராத் வழியாகப் பாய்ந்து செல்கிறது.

நர்மதா என்ற வடமொழிச் சொல்லுக்கு "அமைதியையும் ஆனந்தத்தையும் அளிப்பவள்' என்று பொருள்! மத்தியப் பிரதேசத்திலுள்ள "அமர் கண்டக்' என்ற மலையில் "நர்மதா குண்ட்' என்ற இடத்தில் இந்நதி உருவாகிறது.நர்மதை நதி பாயும் இடத்தில் "கபீர் வட்' என்ற சிறிய தீவு உள்ளது. இங்கு மிகப் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது. இது 2.5 ஏக்கர் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. நர்மதை நதி பள்ளத்தாக்கு முழுவதும் "படிமங்கள்' பற்றிய ஆராய்ச்சிக்கு முக்கிய இடங்களாகக் கருதப்படுகின்றன. டைனோசர்கள் பல இப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக் கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

ஆன்மிகச் சிறப்பு : இந்துக்கள் கங்கை நதியில் நீராடினால் அவர்களது பாவங்கள் யாவும் நீங்கி விடும் என்பது நம்பிக்கை. அப்படிப் பல்லாயிரம் மனிதர்கள் நாள்தோறும் கங்கையில் நீராடுவதால் கங்கை மாசடைந்து விடுகிறது.அதனால் கங்கை நதியானது கருப்பு நிறமுள்ள பசு வடிவம் கொண்டு நர்மதை நதியில் நீராடித் தனது பாவங்களையும் மாசுகளையும் போக்கிக் கொள்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.

வரலாறு: இந்நதிக்கரையில் வாழும் பழங்குடியின மக்கள் நர்மதை நதி கங்கை நதியைவிடப் புனிதமானது என்றும், காலத்தால் முற்பட்டது என்றும் வணங்குகிறார்கள். நர்மதை நதியின் ஆதி பெயர் "ரேவா நதி' என்பதாகும். இராமாயணம், மஹாபாரதம், வாயு புராணம், ஸ்கந்த புராணம் போன்றவற்றில் "ரேவா நதி' என்ற பெயரில் இந்நதி பற்றிப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. "தாலமி' எழுதிய வரலாற்றுக் குறிப்புகளிலும் இந்நதி பற்றிப் பல குறிப்புகள் காணப்படுகின்றன.

பிரம்ம தேவனின் கண்களில் இருந்து விழுந்த இரு கண்ணீர்த் துளிகள் "நர்மதை' மற்றும் "சோன்' நதிகளாக மாறியதாகவும், சிவபெருமானின் உடலில் பெருகிய வியர்வைத் துளிகளே நர்மதை நதியாக மாறின என்றும் புராணங்கள் கூறுகின்றன. எனவே இந்நதியை "சங்கரி' என்றும் அழைக்கிறார்கள்.

தென்னாட்டில் கிரிவலம் (பரிக்ரமா) பிரபலமாக இருப்பதைப் போன்றே, வட இந்தியாவில் நர்மதை நதிவலம் பிரபலம். நர்மதை மிகவும் புனிதமான நதியாதலால், நதியைக் காலணி அணியாமல் வலம் வர வேண்டும். புராணத்தின்படி நர்மதை சிவபெருமானின் உடலிலிருந்து தோன்றியதால் நர்மதை ஜடாசங்கரி என்றும் அழைக்கப்படுகிறது. நர்மதா பரிக்ரமாவை முதலில் ஆரம்பித்தவர் ஸ்ரீமார்க்கண்டேய மகரிஷி. சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமர், பரசுராமர், ஆஞ்சநேயர், விபீஷணர், மஹாபலி, கிருபர், வியாசர் ஆகியோர் நர்மதை நதியைச் சுற்றி வந்து பரிக்ரமா செய்பவர்களை பாதுகாக்கிறார்கள் என்பது ஐதீகம். சபரிமலை யாத்திரையைப் போன்றே, இந்தப் புனித யாத்திரை காலங்காலமாக முனிவர்களாலும், சாதுக்களாலும், ஆன்மீகச் சாதகர்களாலும், நர்மதைக் கரையில் வாழும் கிராம மக்களாலும் தொன்றுதொட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் ஒன்று. பொதுவாகப் பரிக்ரமாவை 3 வருடம், 3 மாதம், 13 நாட்களில் நிறைவு செய்வது மரபு.

புண்ணிய தலங்கள்: நர்மதை நதியின் கரையில் இந்து மதத்தினரின் ஓம்காரேஷ்வர், மண்டலேஷ்வர், மஹேஷ்வர், கருடேஷ்வர், விமலேஷ்வர் மற்றும் பல தலங்களும், சமணர்களுக்கு பர்வானியும், இஸ்லாமியருக்கு மாண்டவும் உள்ளன. ஓம்காரேஸ்வரம்: இந்த ஜோதிர் லிங்கத் திருத்தலம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்தூர் என்ற ஊரிலிருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளன. ஓம்காரேஸ்வரத் தலம் நர்மதையும் காவிரியும் கலக்கும் சங்கமத் துறையில் அமைந்துள்ளது. காவிரி என்று பெயருடைய ஆறுகள் மூன்று இருந்தன.

மத்தியப் பிரதேசத்தில் நர்மதையோடு கலக்கும் காவிரி ஒன்று. கர்நாடகத்தில் உற்பத்தியாகித் தமிழ்நாட்டில் பாயும் காவிரி நதி இரண்டு. இலங்கைக்கு அப்பாற்பட்டு இருந்த வேதங்களும் ஆகமங்களும் தோன்றிய திருத்தலமான மகேந்திரமலை என்ற புனிதத் தலத்தில் பாய்ந்த காவிரியாறு மூன்றாவது, கன்னி, குமரி, காவிரி போன்ற ஒன்பது ஆறுகள் பாய்ந்த வளம் மிக்க மகேந்திரமலை என்ற புண்ணியத் தலம். ஓம்காரேஷ்வரர் கோயிலின் கோபுரத்தின் கீழே கருவறை இல்லை. சற்று வடபுறம் தள்ளி இருக்கிறது. கருவறையில் இறைவன் ஓம்காரேஷ்வரர் என்று பெயர் பூண்டு, காணும் பக்தர்களுக்கு கருணை பொழிகிறார். சிவலிங்கம் சிறியதாகவே உள்ளது.

நர்மதை நீர்மட்டத்திலிருந்து பல அடிகள் உயரே சிவலிங்கம் இருந்து லிங்கத்தைச் சுற்றி ஊறும் நீரை நர்மதை நீரே என்று கூறுகிறார்கள். லிங்கத்தின் தென் சுவரை ஒட்டி பார்வதியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

நேர்த்திக் கடனை முடிக்க பல பக்தர்கள் மலையை வலம் வருவதை `ஓம்காரேஷ்வர் பரிக்ரமா’ என்று சொல்லுகிறார்கள். ஓம்காரேஸ்வர் தீவை சிவபுரி என்றும் நர்மதை தென்கரையின் கிழக்கு மேற்கு இடங்களை முறையே பிரம்மபுரி விஷ்ணுபுரி என்றும் அழைக்கிறார்கள்.

தென் கரையிலும் பல கோயில்கள், அன்னபூர்ணா ஆசிரமம், மார்கண்டேய ஆசிரமம், சரவன ஆசிரமம் முதலியன பார்க்க வேண்டியவை. சிவராத்திரியும், கார்த்திகை பவுர்ணமியும் விசேஷப் பண்டிகைகளாக இங்குக் கொண்டாடப்படுகின்றன.

அன்றைய நாட்களில் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் கூடி, நர்மதை நீராடி இறைவனைக் கண்டு வணங்குகின்றனர். ஓம்காரேஷ்வரர் ஆலயத்தை அடையும் முன் வலப்புறம் நர்மதை நதிக்குக் கீழே போகும் படிகளில் இறங்கினால் இடப்புறம் ஒரு குறை தென்படுகிறது.

ஆதிசங்கரரின் குரு கோவிந்த் பகவத் பாதர் தவம் செய்த புண்ணிய குகை இது! இங்கு தான் ஆதிசங்கரர் சன்யாசம் பெற்றோர். இக்குகையில் ஆதிசங்கரர் இரண்டு ஆண்டுகள் தங்கி, தன் குருவிடமிருந்து பல சாஸ்திரங்களைக் கற்றுணர்ந்து அதன் உண்மைகளைக் காசியில் பகர்ந்த போது அது பாரெங்கும் கங்கை வெள்ளம் போல் பாய்ந்தது.

அந்த வெள்ளமே அத்வைதம்! ஆறு சதுர மீட்டரில் அமைந்துள்ள குகை இடிந்து விடாமலிருக்க வேலைப்பாடுகள் கொண்ட நான்கு கல்தூண்கள் உள்ளன. சாதாரணமாக இருந்த இக்குகையை அழகிய கலை மண்டபமாக மாற்றிய பெருமை குருகோவிந்தரின் புத்திரரும், உஜ்ஜையினி அரசருமான ஸ்ரீஹர்ஷ விக்ரமாதித்யன் என்று ப்ரஹத் சங்கர விஜயம் கூறுகிறது.

போபாலில் உள்ள ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடா சேவா டிரஸ்ட் லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவழித்து இக்குகையைப் புனருத்தாரணம் செய்து 1987ம் ஆண்டு ஏப்ரல் 21-ந் தேதி சங்கர ஜயந்தி அன்று இக்குகையை ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள்.

கங்கை நதிக்கரையில் காசியைப் போல் நர்மதை நதிக்கரையில் ஓம்காரேஷ்வர்! காசியில் இறந்த பின்னே கிட்டுவது முக்தி. ஆனால் ஓம்காரேஷ்வரில் மனிதன் இருக்கும் போதே கிடைப்பது சித்தி! அமலேஸ்வரம் திருத்தலத்திற்கு நர்மதை நதியே புனிதத் தீர்த்தமாக உள்ளது.

ஒரு நதியில் நீராடுவதைவிட இரண்டு நதிகள் இணையும் சங்கமத்தில் நீராடுவது சிறப்பு வாய்ந்தது. ஓங்காரேஸ்வரம் காவிரியும் நர்மதையும் கலக்கும் சங்கமத்தில் அமைந்துள்ளதால் அமலேஸ்வரம் திருக்கோவிலுக்கும் வரும் அன்பர்கள் நதியில் நீராடாமல் போவது இல்லை.மாணிக்கவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பதிகத்தில் அறிவுறுத்தியவாறு நீராடும்போது பரமன் பெயர் சொல்லி நீராடித் துதிக்கின்றனர். நர்மதை நதியிலிருந்து பாண லிங்கங்களையும் கொண்டு செல்கின்றனர்.

அமலேஸ்வரர் திருக்கோவிலுக்கு எதிரே நர்மதையாற்றின் மறுகரையில் நதிக்கரையை ஒட்டி ஓங்காரேஸ்வரர் திருக்கோவில் என்று மற்றொரு கோவில் உள்ளது. தற்காலத்தில் பெரும்பாலோர் இந்தக் கோவிலையே ஜோதிலிங்கக் கோவில் என்று தவறாகக் கருதி குன்றின் மீது உள்ள மமலேஸ்வரம் ஜோதி லிங்கத்தைத் தரிசனம் செய்யாமலேயே வந்து விடுகின்றனர்.

குன்றின் மீது உள்ள மமலேஸ்வரம் கோவிலே பழமையான ஜோதிலிங்கத் திருக்கோவில் என்பதை ஓங்காரரேஸ்வரம் மமலேஸ்வரம் என்று ஜோதிலிங்க சுலோகம் உரைக்கின்றது. ஓம்காரேஷ்வரை ஒருமுறை பார்த்தாலே போதும் பிறவிப் பயனைப் பெறலாம் என்பது உறுதி.

நர்மதாபரிக்ரமா:  நர்மதை நதியின் பிறப்பிடத்தில் இருந்து,அது கடலில் கடக்கும் இடம் வரை நடந்தே சென்று,மீண்டும் அடுத்த கரைவழியாக நர்மதா நதியின் பிறப்பிடத்திற்குத் திரும்புவதே நர்மதா பரிக்ரமா என்று பெயர் நர்மதா நதியின் நீளம் 1300 கி.மீ.கள் இருகரைகளையும் சேர்த்து 2600 கி.மீ.தூரத்தைக் கடக்க சில நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும். தென் கரையில் துவங்கி கடலில் கலக்கும் இடம் வரை பயணித்து, மீண்டும் வடகரை வழியாக நர்மதை நதி பிறக்கும் இடத்திற்கு வரவேண்டும்.

இந்த தூரங்கள் முழுவதும் காலணி அணியக் கூடாது. பணம் வைத்துக் கொள்ளக் கூடாது. இந்தப் பயணம் முழுவதும் பிச்சை எடுத்து சாப்பிட வேண்டும். ஒருவேளைக்கு மூன்று பேர்களிடம் மட்டுமே பிச்சை கேட்க வேண்டும். அந்த மூன்றுபேர்களில் எவரும் உணவு தராவிட்டால்,அடுத்த வேளை வரை எதுவும் சாப்பிடக்கூடாது. இந்தப் பயணம் முழுவதும் முகச்சவரம் செய்யக் கூடாது, கோபப்படக்கூடாது, முடிவெட்டிக் கொள்ளக் கூடாது. பாய்,துணியில் மட்டும் படுத்துத் தூங்கலாம். பிரம்மச்சாரியம் காக்க வேண்டும், அசைவம் ஒருபோதும் சாப்பிடக்கூடாது. நர்மதா நதியின் பிறப்பிடத்தில் ஒரு பாட்டிலில் நீர் எடுத்துக் கொண்டு,அதைப்பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும்;நர்மதா நதி கடலில் கடக்கும் இடத்தில் அந்த பாட்டிலில் இருக்கும் நீரைக் கொஞ்சம் கடலில் கலந்துவிட்டு, பதிலுக்கு கடல் நீரை அதில் நிரப்ப வேண்டும்;நிரப்பி வடக்கு கரைவழியாக மீண்டும் நர்மதா நதி பிறக்கும் இடத்தை வந்தடையவேண்டும்;பிறகு,அந்த பாட்டில் நீரைக் கொண்டு ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்று ஓம்காரேஸ்வரை அபிஷேகம் செய்ய வேண்டும். ஓம்காரேஸ்வரர் ஆலயம் நர்மதா நதி ஒடும் வழியில் ஒரு தீவுக்குள் இருக்கிறது. தென் கரை வழியாகப் புறப்பட்டு,வடகரை வழியாக மீண்டும் நர்மதா நதி பிறப்பிடத்துக்கு வர வேண்டும், எனவே,பரிக்ரமாவின் போது இந்த ஆலயத்திற்குப்போகக் கூடாது. இந்த பரிக்ரமாவை முற்காலத்தில் 3 ஆண்டுகள்,3 மாதங்கள்,12 நாட்கள் வரை தொடர்ந்து செய்து முடித்தனர். நர்மதா நதியில் கிடைக்கும் ஒவ்வொரு கல்லுமே பாணலிங்கங்கள், அரிசி போலவே இருக்கும். இவைகளே பூமியில் புனிதமான சுயம்பு லிங்கங்கள். எனவே நர்மதாபரிக்ரமா பயணத்தின் போது ஓம் நமசிவாய என்றோ அல்லது ஓம் வராகி சிவசக்தி ஒம் என்றோ அல்லது ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ ஜபித்தவாறு பயணிக்க வேண்டும்.

பல சிறிய கோவில்களும் சத்திரங்களும் காட் பகுதியை ஆக்கிரமிக்கின்றன. அருகிலேயே கோரிகாட், கோல்காட் என்ற தளங்களும் அமைந்துள்ளன. கனக பவன் எனப்படும் ராமர் கோயில், நர்மதை மாயீ கோயில், ஸத்ஸங் பவன், சிவாலயம், அனுமன் கோயில், காயத்திரி சக்தி பீடம், ஜகதீசர் கோயில் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றில் காயத்திரி தேவிக்கு அமைக்கப்பட்ட கோயிலும், ஜகதீசர் ஆலயமும் அளவில் சற்றுப் பெரியவை.

ஒவ்வொரு வருடமும் நர்மதாபுரத்தில் நர்மதை ஜெயந்தி என, நர்மதையின் அவதார நாள் மிக உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. மார்ச் மாதம் (மாசி) சுக்ல சப்தமி தினம்தான் நர்மதை ஜெயந்தி.  நர்மதையின் சிறப்பை ஒவ்வொருவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அது இன்றைய நாட்களில் ஓர் உற்சவமாக வடிவெடுத்திருக்கிறது. அன்றிரவில் செய்யப்படும் `தீப்தான்' என்ற விளக்கு வழிபாடு கண்கொள்ளாக்காட்சி! 

ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்ட நாவாய் எனப்படும் படகுகள் மூலம், நதியின் மத்தியில் மிதக்கும் மண்டபம் ஒன்றை உருவாக்குகின்றனர். அப்படகுகளிலிருந்து மெதுவாக நதியில் மிதக்க விடப்படும் தீபங்கள் தொலைவிலிருந்து நோக்கும்போது, ஒரு சிறிய ஒளிக்கோடாய்த் தெரிகின்றன. அருகில் வரவர ஒளி அதிகமாகி ஒளிக்கற்றையாய்க் காட்சி தருகின்றன. மிக அருகில் வந்ததும்தான் அவை சின்னஞ்சிறு விளக்குகள் என்பது தெரியவரும். அப்போது படகு மண்டபம் தீயால் சூழப்பட்டதுபோல் காட்சி தருகிறது. தீபங்களே நதியாய் பிரவாகிக்கிறதோ என்ற எண்ணம் நர்மதை ஜெயந்தி இரவின்போது நமக்குத் தோன்றாமல் இருக்காது. 

அன்று நர்மதை விக்ரகம் ஒன்று நகரின் வீதிகளில் ஊர்வலமாய் எடுத்துச் செல்லப்படுகிறது. பக்தர்கள் முடிக்காணிக்கை செலுத்துவதும் உண்டு. நர்மதை தேவிக்கு அன்று செய்யப்படும் அபிஷேகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பஞ்சாமிர்தம், நெய், தயிர், தேன் ஆகியவை நைவேத்தியப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.  கோஷங்காபாத் நகரின் கிழக்குப்புறம் சுமார் எட்டு கி.மீ. தொலைவில் நர்மதை நதியுடன் தவா எனப்படும் அதன் துணை நதி சங்கமமாகிறது. நர்மதையின் துணை நதிகளில் மிகப் பெரியது தவா நதி. சுமார் நூற்று எழுபத்திரண்டு கி.மீ. நீளம் உடையது. சங்கம இடத்தை நெருங்கும் முன் வலது பக்கம் தவா நதியின் பெரும் பரப்பைக் காணலாம். நர்மதை தவா நதியை தன் சகோதரியாகப் பாவித்து இரு கரம் நீட்டி வரவேற்கிறாள் எனக் குறிப்பிடுகின்றனர்.

அந்த இடத்தில் நர்மதைக் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. நர்மதைக் கோவிலைத் தவிர பாந்தரா பான் என்று அழைக்கப்படும் சங்கம இடக் கரையில் அனுமன், ராம், ஜானகி கோவில் ஆகியவையும் உள்ளன. சங்கம இடத்தில் நதிகளுக்கு நடுவே சிறிய சிவன் கோவிலும் உள்ளது. கார்த்திகை பவுர்ணமி இங்கு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சந்திர, சூரிய கிரகணங்களின் போது கூட்டம் அலை மோதும் இடம் இது. தவா நதியின் பழுப்பு நிற நீரும் நர்மதையின் நீல நிறப் பிரவாகமும் ஒன்றாய் சேர்ந்து திரிவேணி சங்கமம் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றன. 

பாந்த்ரா பான்:  இந்த தீர்த்த மகிமையை வசிஷ்ட சம்ஹிதா ஒரு கதை மூலம் குறிப்பிடுகிறது. பண்டைய நாளில் வைஷ்வானர் என்ற மன்னன் ஒரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான். துரதிர்ஷ்டவசமாக ஒரு யுத்தத்தில் விரோதிகள் அவனது நாட்டை அபகரித்துக் கொள்கின்றனர். மனமுடைந்த மந்திராசலமலை சென்று சிவனை நினைந்து கடும் தவம் புரியத் தொடங்கினான். அவனது கோர தவத்தை தேவரிஷி நாரதர் கண்டார். மண்ணாசையைத் துறந்துவிட்டு ஆத்ம ஞானத்தைப் பெற முயற்சி செய்! என வைஷ்வானரை உபதேசிக்கலானார். நாரதரது அறிவுரையை வைஷ்வானர் கவனிக்கவில்லை. கோபமுற்ற நாரதர், `சபல சித்தம் கொண்ட வைஷ்வானர், நீ நிலையில்லாமல் தாவும் வானரமாகக் கடவாய்!' என்று சபிக்கிறார்.

துக்கமுற்ற வைஷ்வானர், நாரதரிடமே சாபவிமோசனத்திற்கு மன்றாடு-கிறான். `நர்மதையும் தவா நதியும் சங்கமமாகும் இடத்திற்குச் சென்று உனது தவத்தைப் பூர்த்தி செய்! உனக்கு நல்வழி கிடைக்கும்!' என்று அறிவுறுத்திவிட்டு நாரதர் மறைகிறார். வைஷ்வானரது நீண்ட தவத்தால் மனம் மகிழ்ந்த இறைவன், அவன் இழந்தவற்றைப் பெற வரமும் அளிக்கிறார்.

அதுமுதல் இந்த சங்கமம் `பாந்தரா பான்' என்ற பெயரையும் பெற்றது. இங்கே ஸ்நானம் செய்யும் எல்லோரது வேண்டுதல்களையும் பூர்த்தி செய்யும் என்பது நம்பிக்கை!

பயண விபரம்: ஓம்காரேஸ்வரம்

விமான நிலையம் :  இன்டோர்  ( 77 கி.மீ )

ரயில் நிலையம் : ஓம்காரேஸ்வர் ரோடு  ( 12 கி.மீ )           

பேருந்து வசதி  : உண்டு

தங்கும் வசதி : உண்டு

உணவு வசதி : உண்டு

Mail this page Printable view
×
×
×
×
×
×
×