திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்
திருத்தல இருப்பிடம் : இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சி மாவட்ட இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவிலும் உள்ளன.
மூலவர் : புருஷோத்தமன்
தாயார் : பூர்ணவல்லி, சவுந்தர்ய பார்வதி
தல விருட்சம் : கதலி (வாழை)மரம்
தீர்த்தம் : கிழக்கே கதம்பதீர்த்தமும், தெற்கே அய்யன் வாயக்காலும் கோவிலின் தென்புறத்தில் கிணறும் உள்ளன. வடபுறத்தில் பிரகலாத தீர்த்தமும், தெற்கில் பிரம்ம தீர்த்தமும் உள்ளன.
பாடியோர் : அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர்.
தலச் சிறப்புகள் : புருஷோத்தமர் எழுந்தருளியுள்ள திருத்தலமானதால், உத்தமர் கோயில் எனப் புகழ் பெற்றது. பல மன்னர்களும் இத்தலத்திற்குக் கொடையளித்ததாக இங்கு காணப்படும் குறிப்புகள் வெளியிடுகின்றன. இவர்களுள் சோழ மன்னன் கேசரி வர்மனும், பாண்டிய மன்னன் சுந்தரபாண்டியனும் அடங்குவர். முப்பெரும் தேவியர் உடனுறை மும்மூர்த்திகள் அருளும் ஒரே திருத்தலம். சப்தகுரு பகவான்கள் அருளும் ஒரே குருபரிகார ஸ்தலம். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்வித்த திருக்கோவில். சிவபெருமானின் 63 மூர்த்தங்களில் ஒன்றாகிய பிச்சாடனர் திருகோலம் அவதரித்த தலம். ‘சப்தகுருக்கள்’ என்று அழைக்கப்படும்.
பிரம்மகுரு, விஷ்ணுகுரு, சிவகுரு, சக்திகுரு, சுப்ரமயணிகுரு, தேவகுரு பிரஹஸ்பதி, அசுரகுரு சுக்ராச்சார்யார் ஆகிய ஏழு குருபகவான்களைக் கொண்டு விளங்கும் உலகின் ஒரே திருத்தலம். தென்முகமாக குருபகவான் ஸ்தானத்தில் விமானத்துடன் கூடிய தனி சன்னதியில் பிரம்மா அருளும் ஸ்தலம். சிவன், பார்வதி, பிரம்மா, சரஸ்வதி என அனைவருக்கும் இங்கே தனிச் சன்னதிகள் உள்ளன. பிஷாடண மூர்த்தியாக சிவன் காட்சியளிப்பதால் பிஷாண்டார் கோயில் என்ற பெயரும் வழங்கப்படுகிறது. திருமங்கையாழ்வார், கதம்ப மகரிஷி, உபரிசிரவசு, சனகர், சனந்தனர், சனத்குமாரர், முதலியவர்களுக்கு அரும் காட்சி தந்தருளிய பெருமான் இவர். அப்பர், சுந்தரர் மற்றும் திருஞான சம்பந்தர் ஆகிய நாயன்மார்கள் இத்தலம் பற்றிப் பதிகம் பாடியுள்ளனர்.
தல புராணம் : சிவனைப் போலவே ஐந்து தலைகளுடன் இருந்த பிரம்மாவைக் கண்ட பார்வதிதேவி, அவரைத் தனது கணவன் என நினைத்து பணிவிடை செய்தாள். இதைக்கண்ட சிவன், குழப்பம் வராமல் இருக்க பிரம்மாவின் ஒரு தலையை மட்டும் கிள்ளி எடுத்தார். இதனால் சிவனுக்கு பிரம்மகத்தி தோஷம் பிடித்ததோடு, பிரம்மாவின் கபாலமும் அவரது கையுடன் ஒட்டிக்கொண்டது. சிவன் எவ்வளவோ முயன்றும் அவரால் கபாலத்தைப் பிரிக்க முடியவில்லை. அவருக்கு படைக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் கபாலமே எடுத்துக் கொண்டது. எவ்வளவு உணவு இட்டாலும் கபாலம் மட்டும் நிறையவேயில்லை. பசியில் வாடிய சிவன், அதனை பிச்சைப்பாத்திரமாக ஏந்திக்கொண்டு பிட்சாடனார் வேடத்தில் பூலோகம் வந்து பல தலங்களுக்கும் சென்றார். அவர் இத்தலத்திற்கு வந்தபோது பெருமாள், சிவனின் பாத்திரத்தில் பிச்சையிடும்படி மகாலட்சுமியிடம் கூறினார். அவளும் கபாலத்தில் பிச்சையிடவே அது பூரணமாக நிரம்பி சிவனின் பசி நீக்கியது. இதனால் தாயார் “பூரணவல்லி” என்ற பெயரும் பெற்றாள். மகாவிஷ்ணுவும் பள்ளிகொண்ட கோலத்தில் சிவனுக்கு காட்சி தந்தார்.
படைக்கும் தொழிலைச் செய்யும் பிரம்மாவிற்கு பூலோகத்தில் தனக்கென தனியே கோயில் இல்லையே என்ற மனக்குறை இருந்தது. எனவே, மகாவிஷ்ணு அவரை பூலோகத்தில் பிறக்கும்படி செய்தார். பிரம்மா இத்தலத்தில் பெருமாளை வணங்கித் தவம் செய்து வந்தார். அவரது பக்தியை சோதிப்பதற்காக மகாவிஷ்ணு, கதம்ப மரத்தின் வடிவில் நின்று கொண்டார். இதையறிந்த பிரம்மா கதம்ப மரத்திற்கு பூஜைகள் செய்து, சுவாமியை வணங்கினார். அவரது பக்தியில் மகிழ்ந்த மகாவிஷ்ணு காட்சி தந்து, “நீ எப்போதும் இங்கேயே இருந்து என்னை வழிபட்டு வா. நீ பெற்ற சாபத்தால் உனக்கு கோயில்கள் இல்லாவிட்டாலும் இங்கு தனியே வழிபாடு இருக்கும்” என்றார். பிரம்மாவும் இங்கேயே தங்கினார். பிற்காலத்தில் இவருக்கும் சன்னதி கட்டப்பட்டது.
கோவில் அமைப்பு : பிரம்மாவுக்கு இடப்புறத்தில் ஞான சரஸ்வதி தனிச்சன்னதியில் தெற்கு நோக்கியபடி இருக்கிறாள். இவள் கைகளில் வீணை இல்லாமல் ஓலைச்சுவடி, ஜெபமாலையுடன் காட்சி தருவது சிறப்பு. பிரம்மாவிற்கு தயிர்சாதம், ஆத்தி இலை படைத்தும், சரஸ்வதிக்கு வெள்ளை வஸ்திரம், தாமரை மலர் மாலை சாத்தியும் வழிபட்டால் ஆயுள் கூடும், கல்வி சிறக்கும் என்பது நம்பிக்கை. விஷ்ணு கிழக்கு பார்த்தபடி பள்ளி கொண்ட கோலத்திலும், உற்சவர் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்திலும் உத்யோக விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். பூரணவல்லித் தாயார் தனிச்சன்னதியில் அருளுகிறாள். இவள் என்றும் உணவிற்கு பஞ்சமில்லா நிலையைத் தரக்கூடியவள். அருகில் மகாலட்சுமிக்கும் தனிச்சன்னதி இருக்கிறது. இவ்விரண்டு தாயார்களது தரிசனம் விசேஷ பலன்களைத் தரக்கூடியது. பெருமாளுக்கு நேர் பின்புறத்தில் சிவன் மேற்கு பார்த்தபடி லிங்க வடிவில் இருக்கிறார். இவர் பிட்சாடனாராக கோஷ்டத்திலும், உற்சவராகவும் இருக்கிறார்.
சிவன், பிச்சாடனாராக வந்து தன் தோஷம் நீங்கப்பெற்ற தலம் என்பதால் இவ்வூர் “பிச்சாண்டார் கோயில்” என்றும், மகாவிஷ்ணு கதம்ப மரமாக நின்ற ஊர் என்பதால் “கதம்பனூர்” என்றும் “கரம்பனூர்” என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக இருப்பதால் திருமங்கையாழ்வார் இத்தலத்தை “உத்தமர் கோயில்” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். தம்பதியர்கள் இங்கு வேண்டிக்கொண்டால் குடும்பம் சிறக்கும் என்பது நம்பிக்கை. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருளும் தலம்.
கார்த்திகை தீபத்திருவிழாவின்போது மூவருக்கும் மூன்று திசைகளில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டு ஒன்றாக உலா வருகின்றனர். தைப்பூசத் திருவிழாவில் சிவனுக்கும், மாசி மகத்தில் பெருமாளுக்கும் கொள்ளிடத்தில் தீர்த்தவாரி விழா நடக்கிறது. குருப்பெயர்ச்சியின்போது பிரம்மாவிற்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது. சித்திரையில் பெருமாளுக்கும், வைகாசியில் சிவனுக்கும் தேர்த்திருவிழா. குழந்தை பாக்கியம் கிடைக்க, கிரக தோஷங்கள் நீங்க, வேண்டிக்கொள்ளலாம்.
காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம் : திருச்சி
பேருந்து வசதி : உண்டு
தங்கும் வசதி : உண்டு
உணவு வசதி : உண்டு